மீனாட்சி கோயில் பொற்றாமரைக்குளம் 3 ஆண்டாக தண்ணீர் வற்றாமல் சாதனை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2016 10:06
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பொற்றாமரைக்குளத்தில் மூன்றாண்டுகளாக தண்ணீர் வற்றாமல் உள்ளது. இதன் மூலம் சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் சாதனை படைத்துள்ளனர். மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் கோடை காலத்தில் வறண்டு விடும். இங்கு நிரந்தரமாக தண்ணீர் தேக்க தக்கார் கருமுத்து கண்ணன் முயற்சி எடுத்தார். இதையடுத்து சென்னை ஐ.ஐ.டி., நீர் மேலாண்மை தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்குழுவினர் 2013ல் மதுரை வந்தனர். இங்குள்ள வற்றாத கண்மாய்களை ஆய்வு செய்தனர். இதே தொழில்நுட்பத்தை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளத்திலும் புகுத்த முடிவு செய்தனர். குளத்தில் தண்ணீர் நிரந்தரம் : இதையடுத்து பொற்றாமரைக்குளத்தின் தரைத்தளம் முழுவதும் பெயர்த்து எடுக்கப்பட்டது. அதற்கு பதிலாக கண்மாயில் இருந்து மண் சேகரித்து பொற்றாமரைக்குளத்தில் கொட்டப்பட்டது. பின் சோதனை ஓட்டமாக குளத்தில் இரண்டு அடிக்கு தண்ணீர் நிரப்பினர். தண்ணீர் வற்றியதும் மீண்டும் இரண்டு அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டது. இப்படி பல கட்டங்களாக சோதனை முடிக்கப்பட்டது. தற்போது குளத்தில் மூன்று ஆண்டுகளாக தண்ணீர் வற்றாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. குளத்தில் தண்ணீர் வற்றாமல் இருக்க காரணமான ஐ.ஐ.டி., குழுவினரின் செயல்பாடு பாராட்டுக்குரியது.
தூய்மை கோயில் : மத்திய அரசின் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இடம் பெற்றுள்ளது. மீனாட்சி அம்மன் கோயிலை பொறுத்தமட்டில் தூய்மை கோயிலாக பராமரிக்கப்படுகிறது. இதன்படி பராமரிப்பு பணிகள், சிதிலமடைந்த சிலைகள் பராமரிப்பு, கோபுரங்கள் வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. பக்தர்கள் தங்கும் விடுதி, பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் விரைவில் துவங்கவுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் அறநிலைய ஆட்சித்துறை கமிஷனருக்கு பரிந்துரைக்கப்படவுள்ளது.