பதிவு செய்த நாள்
25
ஜூன்
2016
10:06
மதுரை : மதுரை அருகே கீழடியில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை நடத்தும் அகழாய்வில், பழங்கால கட்டடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 3,000 க்கும் மேற்பட்ட சங்க கால பொருட்களும், அவை தொடர்பான தடயங்கள் கிடைத்துள்ளதால், மூன்றாம் கட்ட ஆய்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, வைகை நதியின் இருகரை ஓரங்களில் நடத்திய களஆய்வுகளின் அடிப்படையில், மதுரை அருகே கீழடியில் பழம்பெரும் வணிக நகரம் குறித்த தடயங்கள் கிடைத்தன. இதன் தொடர்ச்சியாக 2015 மார்ச் முதல் செப்டம்பர் வரை, கீழடி பள்ளிச்சந்தை திடலில் அகழாய்வை துவக்கியது. 4 மீட்டர் நீளம், 4 மீ., அகலம், 4 மீ., ஆழம் என 43 குழிகள் தோண்டி நடத்திய ஆய்வில் 1,800 பழங்கால பொருட்கள் கிடைத்தன. இதில் வெளிநாட்டு பொருட்கள் கிடைத்ததால், மதுரை - ராமேஸ்வரம் பகுதியின் முக்கிய வணிக நகராக இப்பகுதி இருந்தது என உறுதி செய்யப்பட்டது. வைகை ஆறும் இந்த பகுதியில் ஓடியிருக்கலாம் என தெரிந்தது. இங்கு கிடைத்த பொருட்கள் பெங்களூருவில் உள்ள தொல்பொருள் ஆய்வு மையத்தில் பாதுகாக்கப்பட்டு, தொடர் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.
இத்துறையினருக்கு பெரும் ஆச்சரியம் அளிக்கும் வகையில், கீழடி முதல்கட்ட ஆய்வில் அதிகமான பழங்கால பொருட்கள் கிடைத்ததால், 2ம் கட்ட ஆய்வுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. 2016 ஜனவரி முதல் ஆய்வு துவங்கியது.தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடைக்காத வகையில் 3,000 க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.புதுமையாக கட்டடங்கள், தண்ணீர் தொட்டிகள், கழிவுநீர் தொட்டி, அதற்கான இணைப்பு குழாய்கள், கட்டடங்களுக்குள் உலைகள் (அடுப்புகள்) இருந்தன. இதனால் தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆச்சரியத்தில் வியந்து நிற்கின்றனர்.தொல்பொருள் ஆய்வுத்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் தலைமையில் ஆய்வாளர்கள் இங்கு முகாமிட்டு உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: நந்த கிஷோர் (தொல்பொருள் ஆய்வுத்துறை உயர்நிலை அதிகாரி): இப்பகுதியில் கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்நகரம் கி.மு., 3ம் நூற்றாண்டு முதல் கி.பி.,3ம் நூற்றாண்டுக்கு உட்பட்டதாக இருக்கலாம். இது தொடர்பாக முழுஆய்வு நடத்தப்படுகிறது. அதிகமான பொருட்கள் கிடைப்பதால் 3ம் கட்ட ஆய்வுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ராஜேஷ் (உதவி தொல்லியல் அலுவலர்): 2ம் கட்ட ஆய்வில் 57 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கன்னிமண் இருக்கும் இடம் வரை தோண்டுகிறோம். குறிப்பிட்ட ஆழத்திற்கு பின் களிமண், மணல் இருக்கிறது. இம்முறை நடக்கும் ஆய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்தன. இதில் சந்தன், முயன், சேந்தன்அததி, மாடைசி போன்ற பெயர்கள் உள்ளன. சங்க காலத்தில் கழிவுநீர் மேலாண்மையை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் வகையில், இப்போது கட்டடங்களில் தண்ணீர் தொட்டி, கழிவுநீர் குழாய், கழிவுநீர் சேகரிப்பு வசதி என பிரமிக்க வைக்கும் கட்டமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை ஆச்சரியப்படுத்துகிறது.
வியப்பை தரும் பொருட்கள் : கார்த்திக் (கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி, முனைவர் பட்ட ஆய்வாளர்): இங்கு நடந்து வரும் முதல்கட்ட அகழாய்விலும் பணிபுரிந்தேன். தொல்லியல் எச்சங்கள் எப்படி இருக்கும், அவற்றை எப்படி கண்டுபிடிப்பது என்பது உள்ளிட்ட பலவிஷயங்களை தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு முறையும் ஆச்சரியப்பட வைக்கும் பொருட்கள் கிடைக்கின்றன. குறிப்பாக காது அணிகள், எலும்பு அம்பு முனை, சுடுமண் முத்திரை, சுடுமண் பொம்மைகள், செப்பு பொருட்கள், தந்தத்திலான பொருட்கள், கத்தி, ஈட்டி என பொருட்கள் உள்ளன.
தீப்தி பவித்ரா (பாண்டிச்சேரி பல்கலை அகழாய்வு பயிற்சி மாணவி): அகழாய்வில் பணிபுரிவது என்பது வித்தியாசமான அனுபவம். ஒவ்வொரு பொருளும் கிடைக்கும் போது, நாமும் அந்த காலத்தில் வாழ்ந்தது போன்ற ஒரு உணர்வு, மகிழ்ச்சி ஏற்படுகிறது. அக்காலத்திலும் நாகரிக கட்டமைப்புடன் கூடிய வாழ்வை நம் மக்கள் தொடர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த இடம் சாட்சி.
சங்க காலம் பார்க்கலாம் : பரத்குமார் (சென்னை பல்கலை தொல்லியல் துறை ஆய்வாளர்): சங்ககாலம் பற்றி புத்தகத்தில் படித்துள்ளேன். அதை இப்போது நேரில் பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது. அக்கால வரலாற்றை படிப்பவர்களுக்கு இந்த இடம் பாடம் நடத்தும் வகையில் இருக்கும்.
களப்பணியில் புதுமை : வசந்தகுமார் (சென்னை பல்கலை கல்வெட்டு ஆய்வாளர்): இங்கு நடந்த ஆய்வுகளில் அனைத்து பொருட்களையும், ஆய்வுப்பகுதிகளையும் வரைபடமாக தயாரித்துக் கொடுக்கிறேன். மிகவும் துல்லியமாக இவை ஆவணப் படுத்தப்படுகின்றன. இங்கு நடக்கும் களப்பணி புதுமையான அனுபவங்களை தினம் தினம் கொடுத்து வருகிறது. இன்னும் பல விஷயங்கள் இந்த பகுதியில் உள்ளன. இரண்டாம் கட்ட ஆய்வில் கீழடியில் கிடைத்துள்ள 3,௦௦௦ க்கும் மேற்பட்ட பொருட்கள் பெங்களூருவுக்கு அனுப்பப்படுகின்றன. இந்த அகழாய்வுப்பணி செப்டம்பர் வரை நடக்கும். அதன் பின் இங்கு தோண்டப்பட்ட குழிகள் மூடப்படும். தற்போது தினமும் பல இடங்களில் இருந்தும் தொல்லியல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வருகிறார்கள். இந்த பகுதியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்கும் வகையில் இங்கு அருங்காட்சியகம் அமைக்கலாம். இப்பகுதியின் அருகே உள்ள கொந்தகை கிராமம் வரையிலான பகுதிகளில், ஆய்வுகளை தொடர்ந்தால் இன்னும் பல புதுமைகள் வெளிவரும். இந்திய தொல்லியல் ஆய்வில், கீழடிக்கு நீங்கா இடம் கிடைக்கும்.