பதிவு செய்த நாள்
13
செப்
2011
11:09
ஊத்துக்கோட்டை : வரும் வாரம் புரட்டாசி மாதம் பிறப்பதால், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆடி மாதம் துவங்கி, 14 வாரங்கள் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், தமிழகம், ஆந்திரா மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுவர். இந்தாண்டும், ஆடி மாதம் துவங்கி ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை குடும்பத்துடன் வழிபட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். வரும் ஞாயிற்றுக்கிழமை புரட்டாசி மாதம் பிறப்பதால், 9வது வாரமான நேற்று முன்தினம், பெரியபாளையம் பவானியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, அம்மனை தரிசனம் செய்தனர். பலர் வேப்பஞ்சேலை அணிந்தும், தங்களது உடலில் அலகு குத்தியும், நேர்த்திக் கடனை செலுத்தினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., பாரதி தலைமையில் போலீசார், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களை ஊத்துக்கோட்டையில் இருந்து, சத்தியவேடு வழியாக திருப்பி விட்டனர்.