பதிவு செய்த நாள்
09
ஜூலை
2016
02:07
சங்ககிரி: சங்ககிரி அருகே, சிதிலமடைந்துள்ள பழமையான விநாயகர் கோவிலை, பாதுகாக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சங்ககிரி ஒன்றியம், அன்னதானப்பட்டி ஊராட்சி, பூத்தாலக்குட்டையில், 1,200 ஆண்டுகள் பழமையான, கி.பி., 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, பூத்தாலீஸ்வரர் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமான, 18 ஏக்கர் விளைநிலம் உள்ளது. அதில், பூத்தாலீஸ்வரர் கோவிலுக்கு, 9 ஏக்கர், விநாயகர் கோவிலுக்கு, 9 ஏக்கர் என, பிரிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை குத்தகைக்குவிட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தில், கோவில் பராமரிக்கப்பட்டது. இந்த நிலையில், பழமையான பூத்தாலீஸ்வரரின் இணைக்கோவிலான விநாயகர் கோவில், 50 ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை. அதனால், அந்த கோவில் உச்சியில் முளைத்த ஆலமரம், கோவில் முழுவதும் வேர்கள் சூழ்ந்துள்ளது. அதனால், கோவிலின் முன்பகுதி சிதிலமடைந்து, சாய்ந்துகிடக்கிறது. இந்த கோவில்களின் வரலாறு சம்பந்தமாக பொறிக்கப்பட்ட, 8ம் நூற்றாண்டு கல்வெட்டு, பூத்தாலீஸ்வரர் கோவிலில் உள்ளது. மேலும், கோவில் தூண்களில், மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதால், பாண்டியர் காலத்தில் கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. எனவே, தொல்லியல் துறையினர், இந்த கோவிலை ஆராய்ந்து, கோவிலை சீரமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.