நாகர்கோவில்: ஆடி செவ்வாயை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தாழக்குடியில் உள்ள அவ்வையார் அம்மன் கோயிலில் பெண்கள் கொழுக்கட்டை படைத்து வழிபட்டனர்.
ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு நடத்தினால் எல்லா நன்மைகளும் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று ஆடி மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவி கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட கியூவில் நின்று தரிசனம் நடத்தினர். பல கோயில்களிலும் பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். கோயில்களில் தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மதியம் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. தாழக்குடியில் தமிழ் புலவர் அவ்வையார் அம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு ஆடி மாதம் எல்லா செவ்வாய் கிழமைகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். நேற்று காலை முதலே இங்க பெண்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அம்மனனை வழிபட்ட பெண்கள் கொழுக்கட்டை படைத்து அம்மனுக்கு நிவேத்யம் செய்தனர். குடும்பத்தினருடன் குழுமிய பெண்கள் மதிய உணவையும் இங்கேயே உண்டு மாலை வரை இருந்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் அம்மனுக்கு வைர மூக்குத்தி அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.