வத்திராயிருப்பு: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான நல்லதங்காள் கோயிலில் ஆடிப்பவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரம் கிராமத்தை ஒட்டி இக்கோயிலில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி பவுர்ணமி திருவிழா மதுரையை சேர்ந்த பக்தர்களால் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா நேற்று காலையில் துவங்கியது. நல்லதங்காள் அம்மனுக்கும், அவரது சகோதரர் நல்லதம்பி கோயிலிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் நல்லதங்காள் எழுந்தருளினார். அவருக்கு பக்தர்கள் பொங்கல் படையலிட்டு வழிபட்டனர். பின்னர் அவரது ஏழு குழந்தைகளுக்கும், பொறி, பிஸ்கட் உட்பட பதார்த்தங்களை படையலிட்டு வழிபட்டனர். நல்லதங்காள் தற்கொலை செய்து கொண்ட கிணற்றில் விஷேஷ பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மொட்டை எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தசபா தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் அகிலன், பொருளாளர் வீரபாண்டி உட்பட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.