முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்வியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி ஏந்தியவாறு பூக்குழி இறங்கினர். இக்கோயிலில் 40 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா ஜூலை 10ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அம்மன் வீதியுலா வருதல், திருவிளக்கு பூஜை மற்றும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்துவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று பூக்குழி விழா நடந்தது. முன்னதாக ஏராளமான பக்தர்கள் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகுகள் குத்தியும், பறவை காவடியில் தொங்கியும் ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி நேர்த்திகடன் நிறைவு செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.