ராமேஸ்வரம் கோயிலில் நாளை புதிய கொடி மரம் பிரதிஷ்டை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2016 04:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நாளை (ஜூலை 21) புதிய கொடி தேக்கு மரம் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார். ராமேஸ்வரம் கோயிலில் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரம் முறிந்ததால், அதனை அகற்றி ரூ. 5 லட்சம் செலவில் புதிய கொடி மரம் நிறுவ கோயில் நிர்வாகம் முன்வந்தது. இதற்கான செலவை ராம்கோ குரூப் ஏற்றது. அதன்படி ஜூலை 11ல் சேதமடைந்த கொடி மரத்தை அகற்றி பாலாலய பூஜை நடந்தது. இதன் பின், 40 அடி நீளமுள்ள புதிய தேக்கு மரம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு, அதனை கொடி மரமாக ஸ்தபதிகள் வடிவமைத்தனர். இதனை, நேற்று கோயிலில் ஊன்றி ஸ்தபதிகள் சோதனை செய்தனர். நாளை(ஜூலை 21) புதிய கொடி மரம் பிரதிஷ்டை செய்து மகா தீபாரதனை, பூஜைகள் நடக்கும் என இணை ஆணையர் செல்வராஜ் தெரிவித்தார்.