பதிவு செய்த நாள்
16
செப்
2011
12:09
கள்ளப் பிள்ளையார்
திருக்கடவூர் என்கிற திருக்கடையூரில் உள்ள விநாயகர் திருநாமம் கள்ளப் பிள்ளையார். சோரவாரணப் பிள்ளையார் எனவும் வழங்கப்படுவார். பாற்கடலில் இருந்து அமுத கலசத்தைக் கொண்டு வந்து மறைவிடத்தில் வைத்தவர் இவர். கள்ளத்தனம் செய்தவர். ஆகையால், திருக்கோயிலில் விநாயகருக்குரிய யதாஸ்தானத்தில் இல்லாமல் ஓரிடத்தில் மறைவாக இருந்து அருள்கிறார்.
இரட்டைப் பிள்ளையார்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சீவலப்பேரியில் இரட்டைப் பிள்ளையார் கோயில் உள்ளது. கருவறையில் மாப்பிள்ளைகளைப் போல அலங்காரம் செய்யப்பட்ட இரு பிள்ளையார்கள் அமர்ந்திருக்கிறார்கள். இந்த இருவருக்கும் நடுவில் ஒரு தீபம் எரிந்து கொண்டிருக்கிறது.
56 கணபதிகள்
காசியில் 56 கணபதிகள் இருக்கிறார்கள். காசியைச் சுற்றி ஏழு பிரகாரம் (ஆவரணம்) இருக்கிறது என்பார்கள். ஒரு ஆவரணத்தில் எட்டு வீதம் ஏழு ஆவரணங்களில் 56 கணபதிகள். இவர்களை நினைத்தாலே போதும். திருநாமத்தை உச்சரித்தாலேகூடப் போதும். ஆபத்துகளிலிருந்து நம்மைக் காத்து விடுவார் என்கிறது காசிக் கண்டம் என்ற நூல்.
நேத்திர விநாயகர்!
சுவாமிமலை முருகன் சன்னதி நுழைவாயிலில் ஒரு பிள்ளையார் அருள்பாலிக்கிறார். தீராத கண் நோயுடைய ஒரு பக்தர் இந்தப் பிள்ளையாரை வேண்டி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தார். அவர் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு பிரகாசமான கண்களை அருளினார் இவர். அதனால் இவரை நேத்திர விநாயகர் என்ற பெயரில் கண் கொடுத்த விநாயகராக வழிபடுகிறார்கள்.