மைசூர் தசரா பண்டிகையில் யானைகளுக்கு முக்கியப்பங்கு உண்டு. மொத்தம் 12 யானைகள் இதில் கலந்து கொள்கின்றன. இதற்காக யானைகள் நாகாஹொளே தேசியப் பூங்காவிலிருந்து அழைத்து வரப்படுகின்றன. யானைப் பேரணிக்கு தலைமை தாங்கும் பலராமாவுக்கு தனிச் சிறப்புண்டு. தொடர்ந்து பல வருடமாக அது தங்க அம்பாரியைச் சுமக்கிறது. துரோணா என்ற யானை இதுவரை 14 தடவை தங்க அம்பாரியைச் சுமந்து சாதனை படைத்துள்ளது. பலராமாவுடன் அர்ஜுனா, பரதா, கஜேந்திரா போன்ற யானைகளும் வரும். தசராவுக்காக காட்டிலிருந்து வரும் இந்த யானைகளுக்குத் தரப்படும் வரவேற்பே தனி அழகு. மலர்கள் தூவப்பட்டு ஆட்டம் பாட்டத்துடன் யானைகள் வரவேற்கப்படுவதைக் காண பெரும் திரளாக மக்கள் கூடுவர். யானைகள் வந்துவிட்டாலே தசரா களை கட்டிவிடும்.