பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே, காணாமல் போன ஐம்பொன் சிலையை ரயில் தண்டவாளத்தில் கண்டெடுத்து, பொது மக்கள் கோவிலில் ஒப்படைத்தனர். கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை வீரவர் கோவில் பூசாரி பழனி, கடந்த 23ம் தேதி காலை கோவிலுக்கு வந்தபோது, கதவு பூட்டு உடைக்கப்பட்டு, கோவிலின் உள்ளே இருந்த ஒரு அடி உயரம், 5 கிலோ எடையுள்ள ஐம்பொன் முருகர் சிலை மற்றும் உண்டியல் திருடு போனது தெரிய வந்தது. திருடு போன உண்டியல் அருகில் உள்ள ரயில்வே பாதையோரத்தில் கிடந்தது. இதுகுறித்து பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், பெண்ணாடம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில், நேற்று பகல் 1:30 மணியளவில், காணாமல் போன ஐம்பொன் சிலை கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், சிலையை எடுத்துச் சென்று கோவிலில் பூசாரியிடம் ஒப்படைத்தனர்.