பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
12:07
சதுரகிரி ஆடி அமாவாசை விழாவிற்கு சிறப்பு பஸ்கள் வந்து செல்ல, தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்காக மலையடிவாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், 2 கி.மீ., துாரத்தில் உள்ளதால், பக்தர்கள் சிரமமடையும் நிலை உள்ளது. சதுரகிரி மலை அடிவாரத்தில் நாளுக்கு நாள் அரங்கேறும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பால், பஸ்கள் சென்று வருவதற்கு கூட இடமின்றி நெரிசல் ஏற்பட்டது. அடிவாரத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்டும், ஆக்கிரமிப்பிலிருந்து தப்ப வில்லை. கடந்த ஆண்டு அடிவாரத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்திற்கு அப்பால், தனியார் வயலில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டது. தற்போது அந்த இடத்தில், விவசாயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாதமாக அதிகாரிகள் தற்காலிக பஸ் ஸ்டாண்டிற்கு இடம் தேடி அலைந்தனர். சில நாட்களுக்கு முன் தனியார் சிலர் இடம் தர முன்வந்ததை தொடர்ந்து, அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
அதிகாரிகள் தேர்வு செய்துள்ள இடம் மலை அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து, 2 கி.மீ., துாரத்திற்கு மேல் உள்ளது. குடும்பத்துடன் வரும் பக்தர்கள் தாங்கள் எடுத்து வரும் உடைமைகளுடன் அதிக துாரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. அடிவாரத்திலிருந்து கோவில் வரை, 9 கி.மீ., மலை ஏறவும், இறங்குவதற்கு, 9 கி.மீ., என 18 கி.மீ., நடந்து செல்ல வேண்டியுள்ளது. பஸ்சை விட்டு அடிவாரம் செல்லவும், அடிவாரத்திலிருந்து பஸ் ஏறுவதற்காக என, 4 கி.மீ., நடக்க வேண்டி உள்ளதால், பக்தர்களுக்கு கூடுதல் சிரமம் ஏற்பட்டுள்ளது. - நமது நிருபர் -