பதிவு செய்த நாள்
25
ஜூலை
2016
12:07
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள, கரிவரதராஜபெருமாள் கோவில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூரில், பிரசித்தி பெற்ற கரிவரதராஜபெருமாள் கோவில் உள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலை உரிய முறையில் பராமரிக்காததால், மண்டபத்தின் மேல் தளத்தில் செடிகள் வளர்ந்து காணப்படுகின்றன. கடந்த ஆண்டு அக்., மாதம், கோவில் கோபுரத்தின் தெற்கு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதுகுறித்து, கடந்த ஏப்., மாதத்தில், அறநிலையத்துறை செயல் அலுவலரிடம் கேட்டபோது, "என்னிடம் யாரும் கூறவில்லை. நேரில் வந்து பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கிறேன்" என்றார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என, அப்பகுதியினர் தெரிவித்தனர்.