பதிவு செய்த நாள்
03
ஆக
2016
12:08
வேலூர்: கனகநாச்சியம்மன் கோவிலில் நடந்த ஆடிப்பெருக்கு விழாவில், இரு மாநில பக்தர்கள் பங்கேற்றதால் களை கட்டியது. விழாவுக்கு ஆந்திர முதல்வர் வராததால், அவருக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக காத்திருந்த, தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வேலூர் மாவட்டம், வாணிம்பாடி அடுத்த புல்லூரில் கனகநாச்சியம்மன் கோவில் உள்ளது. கடந்த, 40 ஆண்டுகளாக தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. கடந்த மாதம் இந்த கோவிலை ஆந்திர அரசு கைப்பற்றியது. இதனால் இந்தாண்டு ஆடிப்பெருக்கு விழா நடக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், ஆந்திர அறநிலையத் துறையினர் விழா நடத்தப்படும் என, அறிவித்தனர். இதில், தமிழக பக்தர்கள் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர். இங்கு ஆடிப்பெருக்கு திருவிழா நேற்று நடந்தது. சித்தூர் மண்டல் கோவில் பரிபாலன அதிகாரி ராமையா விழாவை துவக்கி வைத்தார். அதிகாலை, 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபி ?ஷகம், பூஜை நடந்தது. அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க, 300 ஆந்திர மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்பார் என அறிவித்திருந்தனர். ஆனால், ஆந்திராவில் தனி மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் பந்த் நடத்துவதால், விழாவில் அவர் பங்கேற்கவில்லை. ஆந்திர முதல்வர் வந்தால், அவருக்கு கறுப்பு கொடி காட்டுவதற்காக, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் தனபால் தலைமையில், 50க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். ஆனால், முதல்வர் வராததால், அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கோவில் திருவிழாவையொட்டி, தமிழக எல்லை பகுதியில் தமிழக போலீசார், 100 பேர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.