பதிவு செய்த நாள்
05
ஆக
2016
05:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. கோவிந்தா...கோபாலா கோஷத்தின் மத்தியில் ஆடி, அசைந்து வந்த தேரினை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். இக்கோயில் ஆடிப்பூர விழா கடந்த ஜூலை 27ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 9ம் நாளான இன்று(ஆக.5) அதிகாலை, ஸ்ரீரங்கம் பெருமாள், மதுரை கள்ளழகர் கோயில்களில் இருந்து கொண்டு வந்த வஸ்திரங்களை அணிந்தப்படி ஆண்டாள், ரெங்கமன்னார் திருத்தேருக்கு எழுந்தருளினர்.
பக்தர்கள் தரிசனம்: அங்கு ரகுராமன் மற்றும் விஜயபாஸ்கரபட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். 8.05 மணிக்கு கோவிந்தா...கோபாலா கோஷத்தின் மத்தியில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க ரதவீதிகள் வழியாக வலம் வந்த தேர் 11 .15 மணிக்கு நிலைக்கு வந்தது. பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து தேரில் ஏறியப்படி ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர்.
நீதிபதிகள்: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மாலா, கோகுல்தாஸ், மாவட்ட நீதிபதி தாரணி, விருதுநகர் கலெக்டர் சிவஞானம், ஐ.ஜி., முருகன், டி.ஐ.ஜி., ஆனந்தகுமார் சோமானி, அறநிலையத்துறை இணைஆணையர் செந்தில்வேலன், துணை ஆணையர் ஹரிஹரன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். எஸ்.பி.,ராஜராஜன் தலைமையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.