பாகம்பிரியாள் கோயிலுக்கு சப்பரத்திற்கு பதில் புதிய தேர் பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2016 01:08
திருவாடானை: திருவாடானை அருகில் உள்ள பாகம்பிரியாள் கோயிலுக்கு புதிய தேர் நிர்மாணித்து தேரோட்டம் நடத்தவேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்திபெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய் நாட்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், சித்திரை திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் நேர்த்தி கடனாக செலுத்தும் காணிக்கை பொருட்கள் மூலம் ஆண்டிற்கு பல கோடி ரூபாய் இக்கோயிலுக்கு வருமானம் கிடைக்கிறது. இருந்தும் சித்திரை திருவிழாவின் போது தேரோட்டம் என்ற பெயரில் சப்பரத்தை வைத்து வீதியுலா நடத்தப்படுகிறது. இவை பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது. சப்பரத்திற்கு பதில் புதிய தேர் நிர்மாணித்து தேரோட்டம் நடத்த இந்து அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து பக்தர்கள் கூறுகையில்,“ இக் கோயிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடக்கிறது. சிறிய அளவிலான சப்பரத்தை வைத்து தேரோட்டம் நடத்துவது வேதனையாக உள்ளது. கோயில் வருமானத்தை செலவிட தயங்கினால் பக்தர்களிடம் நன்கொடை பெற்றாவது புதிர் தேர் நிர்மாணித்து தேரோட்டம் நடத்த கோயில் நிர்வாகம் முன்வரவேண்டும்,” என்றனர்.