பதிவு செய்த நாள்
12
ஆக
2016
11:08
சென்னை: திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் உள்ள, யோக நரசிம்மன் உள்ளிட்ட சன்னிதிகளுக்கு, 95 லட்சம் ரூபாயில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, வரும், 22ம் தேதி, மகா சம்ப்ரோக் ஷணம் நடைபெற உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவில், எட்டாம் நுாற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவில் திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள யோக நரசிம்மன், வரதராஜ சுவாமி, திருமழிசையாழ்வார், கருடாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் சன்னிதிகள், அவற்றின் விமானங்கள் மற்றும் பாண்டிகோபுரம், நரசிம்மர் கல்யாண மண்டபம் ஆகியவற்றிற்கு, கடந்த ஜூலை மாதம், 10ம் தேதி, திருப்பணிகள் துவக்கின. திருப்பணிகள், கோவிலின் பழமை மாறாமல், தொல்லியல் துறை வல்லுனர்களின் ஆலோசனைப்படி, 95 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகின்றன. இதில், 55 லட்சம் ரூபாய் மதிப்பில் சுவாமி கிரீடம், கர்ணபத்திரம், ஸ்ரீசட கோபம் கவசங்களுக்கு தங்க ரேக் பதிக்கும் பணி நடக்கிறது.
முதன் முறையாக நரசிம்ம சுவாமிக்கு சொர்ணப்பந்தனமும், கஜேந்திர வரதராஜ சுவாமிக்கு ரஜத பந்தனமும் பொருத்தப்படவுள்ளது. பணிகள் முடியவுள்ளதை அடுத்து, மகா சம்ப்ரோக் ஷணம், வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. இதை முன்னிட்டு, வரும் 18ம் தேதி, யாகசாலை பூஜை துவங்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன. காவல் துறை, சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, சுகாதாரத்துறை ஆகியோருடன் இணைந்து, கோவில் நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இத்திருப்பணிகளை அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கமிஷனர் வீரசண்முகமணி உள்ளிடோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.