பதிவு செய்த நாள்
12
ஆக
2016
12:08
வரலட்சுமி விரதம் எதிரொலியாக, காய்கறி, பழங்கள் விற்பனை, சென்னையில் நேற்று களை கட்டியது. வரலட்சுமி விரதம், இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், பெண்கள், நோன்பு இருந்து, கடவுளுக்கு காய்கறி, பழங்களைப் படைத்து, பூஜைகள் செய்வர். இதன் காரணமாக, காய்கறி, பழங்களின் வரத்து, கடந்த இரு நாட்களாக அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, காய்கறிகள், பழங்கள் வரத்து அதிகளவில் இருந்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் பலரும், நேற்று அதிகாலையிலேயே மார்க்கெட்டிற்கு சரக்கு வாகனங்களில் வந்தனர். தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், எலுமிச்சை, தேங்காய், அருகம்புல், மாவிலை, தென்னங்கீற்று, மஞ்சள், வாழைப்பழம் போன்றவற்றை மொத்தமாக வாங்கி சென்றனர்.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும், மாநகர பஸ்கள், கார்கள் போன்றவற்றில், கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்தனர். சில்லரை விற்பனை மார்க்கெட்டிற்கு சென்று, பூஜைக்கு தேவையான பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்கிச் சென்றனர். ஆடி மாதத்தால், காய்கறிகள், பழங்கள் விற்பனை மிகவும் குறைந்திருந்தது. இதனால், கோயம்பேடு வியாபாரிகள் பலரும் வருத்தத்தில் இருந்தனர். ஆனால், கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு, வரலட்சுமி விரதத்திற்கான பொருட்கள் விற்பனை அமோகமாக நடந்ததால், அவர்கள் உற்சாகம் அடைந்தனர்.