திருப்புவனம் கருப்பணசாமியின் ராட்சத அரிவாளுக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2016 01:08
திருப்புவனம்: திருப்புவனம் மாரநாடு கருப்பணசாமிக்கு நேர்த்திக் கடனுக்காக தயாரிக்கப்பட்ட ராட்சத அரிவாளுக்கு மது ஊற்றி பூஜை செய்யப்பட்டது.
திருப்புவனத்தில் அரிவாள், கத்தி உள்ளிட்ட இரும்பு சம்பந்தப்பட்ட உழவு கருவிகள் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. சீசன் இல்லாத காலங்களில் கருப்பணசாமிக்கு நேர்த்திக்கடன் அரிவாள் அதிகளவில் தயாரிக்கின்றனர். ஒன்றரை அடி முதல் 18அடி வரை அரிவாள் தயாரிக்கப்படுகிறது. மாரநாடு கருப்பணசாமி, மதுரை அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி என பல்வேறு காவல் தெய்வங்களுக்கு அரிவாள் தயாரிக்கப்படுகின்றன.
திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆசாரி மலேசியாவில் வசிக்கும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த வேணுகோபால் என்ற பக்தரின் வேண்டுகோளுக்கு இணங்க 18 அடி உயரமுள்ள இரண்டு ராட்சத அரிவாள்களை தயாரித்துள்ளார். (ஆக.,12) வெள்ளிக்கிழமை இந்த அரிவாள்களுக்கு சிறப்பு பூஜை செய்து மலேசிய பக்தர் வாங்கிச் சென்றார். வழக்கமாக தேங்காய் பழம் வைத்து பூஜை செய்வர். ஆனால் அரிவாள்களை கருப்பணசாமிக்கு கொண்டு செல்வதால் மதுபாட்டிலை முன்புறம் வைத்து பூஜை நடந்தது. பின் பாட்டிலை உடைத்து அரிவாள் மீது தெளித்தனர். பூஜை முடிந்தபின் அரிவாள்கள் மினி வேனில் ஏற்றப்பட்டு கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.