பதிவு செய்த நாள்
18
ஆக
2016
11:08
வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். முற்காலத்தில், ஒரு கிராமத்தையே இரவில் கொள்ளையர்களிடம் இருந்து காப்பவராக முனீஸ்வரர் இருந்துள்ளார். காவல் தெய்வமான, முனீஸ்வரரை, முனி, முனியாண்டி, முனியப்பர், முனியன் என, பல பெயர்களில், கிராம மக்கள் அழைத்து வழிபடுகின்றனர். முனி என்ற சொல் புராணங்களில், தெய்வ ஆவேசம் படைத்தவர் எனும் அர்த்தத்தில் பதிவு பெற்று உள்ளது. தவறு செய்தால் தலையில் அடிப்பார், மனிதனோடு மனிதனாக வருவார், வானுக்கும், பூமிக்கும் ஒளிப்பிழம்பாக காட்சி தருவார் முனீஸ்வரர் போன்ற நம்பிக்கைகள் மக்களிடம் உள்ளன. இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளிலும், முனீஸ்வரர் வழிபாடு உள்ளது. அப்படிப்பட்ட ஆண் காவல் தெய்வம் முனீஸ்வரரை, மணப்பாக்கம், தர்மராஜாபுரத்தில் கோவில் கட்டி வழிபடுகின்றனர் அங்குள்ள மக்கள்.
சுமார், 300 ஆண்டுக்கு முன் பிருந்தே, முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். சுயம்பாக வந்த முனீஸ்வரர், அங்குள்ள இலுப்பை, அரசமரம், ஆலமரம், பனை மரத்தில் வாழ்ந்து, பவுர்ணமியின் போது, மரக்கிளைகளில் தாவி, தாவி சென்றபடி, மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றினார். முற்காலத்தில், மணப்பாக்கத்தில் உள்ள, 1,500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு காவலராக விளங்கியவர் முனீஸ்வரர். பல தலைமுறையாக, நாங்கள் அவரை வணங்குகிறோம். ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி பூஜை நடைபெறும். சித்ராபவுர்ணமி அன்று சிறப்பு பூஜை நடக்கும். குறிப்பிட்ட நபர் என்றில்லை; கும்பிட வரும் யாருடைய உடலில் புகுந்தும் முனீஸ்வரர் அருள் வாக்கு கூறுவார். மக்கள் கேட்ட வாக்குறுதிகளை உடனே நிறைவேற்றக்கூடிய சக்தி படைத்தவர். முனீஸ்வரர், கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 15 ஆண்டுகளுக்கு முன், முனீஸ்வரர் குடிபுகுந்த, சுயம்பு லிங்கம் அமைந்த இடத்தில், கோவில் கட்டி, அவரின் காவல் வாகனமான குதிரை அமைத்தோம்.
சைவ வழிபாடு தான். அவருக்கு பிடித்தமான, அவுல், சுண்டல், பொரி, சக்கரை, புளிசாதம், சுருட்டு, பூ, பழம் வைத்து படைப்போம். பவுர்ணமியில், பக்தர்கள் விரும்பிக் கேட்டால், முனீஸ்வரரை திரையால் மூடி விட்டு, கோவில் வெளியே ஆடு, கோழி, வெட்ட அனுமதிப்போம். மது படையலும் அதுபோல் தான் என்கிறார், அர்ச்சகரும், கோவில் நிர்வாகியுமான ரமேஷ். ராணி என்ற பெண் அர்ச்சகரும் அக்கோவிலில் உள்ளார். தங்கள் கிராமத்தில் முனீஸ்வரரை வழிபட்டு வந்து பின் பொருளாதாரம் உள்ளிட்ட தேவைகளுக்காக, கிராமங்களில் இருந்து, சென்னைக்கு இடம் பெயர்ந்துள்ள பலர், மணப்பாக்கம், முனீஸ்வரரை தேடி சென்று வழிபட்டு வருகின்றனர்.
இடம்: தர்மராஜாபுரம், மணப்பாக்கம்
நடை திறப்பு தினமும்: காலை 6:00 முதல் 7:00 மணி வரை மாலை, 5:00 முதல் இரவு, 9:00 மணி வரை ,மாதம் தோறும் பவுர்ணமி வழிபாடு
சித்ரா பவுர்ணமி அன்று சிறப்பு வழிபாடு.