பதிவு செய்த நாள்
18
ஆக
2016
11:08
காஞ்சி: தமிழகத்தில் காஞ்சி மாநகரில் புத்த பிரானுக்கு ஒரு கோவில் அமைய இருக்கிறது. காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அதன் விளையாட்டுத் திடலில், 40 ஆண்டுகளுக்கு முன் ஒரு கிணறு தோண்டியபோது, பூமிக்கு அடியிலிருந்து, 5 அடி உ யரமுள்ள, அமர்ந்த, தியான நிலையில் உள்ள ஒரு புத்தரின் கற்சிலை வெளிப்பட்டது. அது, கிடைத்த விளையாட்டுத் திடலிலேயே இன்றும் உள்ளது. அந்த சிலையை, டாக்டர் இரா.நாகசாமி, தமிழ்நாடு புத்த சங்கச் செயலர் சந்திரசேகர், சென்னைப் பல்கலைக் கழக பேராசிரியர் மிஸ்ரா ஆகியோர் அண்மையில் சென்று பார்வையிட்டனர். பள்ளி நிர்வாகத்தினரும் உடனிருந்தனர்.
இந்த சிலை, 9 – 10ம் நூற்றாண்டு சிலையாக காணப்படுகிறது. இச்சிலையை அங்கேயே வைத்து பள்ளி பயனுக்கும், உடைமைக்கும் குந்தகம் ஏற்படாது வழிபட, பவுத்த சமய சங்கம், அரசின் அனுமதியும் பெற்றுள்ளது. இவ்விளையாட்டுத் திடலில் இந்த சிலை கிடைத்த இடத்தின் அருகில், சற்று ஓரமாக ஒரு எழிலான மண்டபம், சற்று சிதிலமடைந்து உள்ளது. ஆயினும் பெரும்பாலும், நல்ல நிலையிலேயே உள்ளது. 40 – 50 ஆண்டுகளுக்கு முன் இம்மண்டபத்துக்கு அருகில் உள்ள கந்த கோட்டத்தில் இருந்து, முருகன் வீதியுலாவாக கொண்டு வைக்கப் படுவது வழக்கம் என்றும் கூறுகின்றனர். இவ்விழாவை, ஒரு முதலியார் குடும்பம் நடத்தி வந்தது என்றும், விழா நின்று, 50 ஆண்டுகளுக்கும் மேலிருக்கும் என்றும் கூறுகின்றனர். ஆதலின் பள்ளி நிர்வாகம் இம்மண்டபத்தை இடித்து விட, பரிந்துரை செய்துள்ளது என்றும் அறிகிறோம். இதைப் பார்வையிட்ட நாகசாமி, ‘இவ்வெழிலான மண்டபத்தை பழுது பார்த்து இப்புத்த பிரானை வைத்து எல்லாரும் வணங்கவும், பாதுகாக்கவும் முடியும்’ என, பரிந்துரை கூறினார். இக்கருத்தை எல்லாரும் ஒருமனதாக மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கடந்த, 200 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த மண்டபத்தை இடிக்காமல் காக்கவும், புத்த பெருமானை வணங்கவும் முடியும் என்பதால், விரைவில் புத்தர் கோவிலாக இது பரிமளிக்கும் என, எதிர்பார்க்கலாம். அசோகர் மவுரியர் காலத்திலிருந்து, 13ம் நூற்றாண்டு வரை காஞ்சியில் பவுத்தர் கோவில் இருந்துள்ளது. பல புத்தர் சிலைகள் உள்ளன. காஞ்சியில் போதி தர்மர் என்பவர் தான் அங்கு பவுத்த சமயத்தை பரப்பினார். காஞ்சிபுரத்தில் இருந்து புத்தர் உள்ள இடத்துக்கு அருகில் நூற்றாண்டுகளுக்கு முன், 7 அடி உயரத்துக்கும் மேலான ஒரு புத்தர் சிலை கிடைத்தது. மூன்றாம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட அந்த சிலை இப்போது, சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது.