சீதையின் தந்தை ஜனகர் அல்லவா? சீரத்வஜர் என்கிறீர்களே என்பவர்கள் மேற்கொண்டு படிக்கலாம். மிதிலாபுரியை தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் அரசர் ஜனகர். குழந்தையில்லாத இவர், புத்திரகாமேஷ்டி யாகம் செய்வதற்காக, தங்கக்கலப்பை கொண்டு பூமியை உழுது சமன் செய்த போது, ஒரு பெட்டியைக் கண்டெடுத்தார். அதில் இருந்த பெண் குழந்தைக்கு சீதை என்று பெயரிட்டார். ஸுதம் என்ற சொல்லுக்கு கலப்பை கொழுவின் நுனி என்று பொருள். கொழுநுனி மூலம் கிடைத்தவள் என்பதால் சீதா என்று பெயரிட்டார். இவரது நிஜப்பெயர் சீரத்வஜர். இவர் நிமி என்ற மன்னனின் பரம்பரையில் வந்தவர். அந்த பரம்பரையில் வந்த அனைவருக்கும் ஜனகர் என்ற பொதுப்பெயர் அவரவர் பெயருடன் இணைக்கப் பட்டிருக்கும். ஜனகர் என்ற சொல்லுக்கு தந்தை என்று பொருள். நாட்டு மக்களுக்கு தந்தை போல் கண்டிப்பும் கனிவும் நிறைந்த சேவை செய்தவர்கள் என்பதால் இந்தப்பெயர் இணைக்கப்பட்டது. சீதையின் தந்தை ஜனகர், மகாலட்சுமிக்கே தந்தையாகும் பாக்கியம் பெற்றார்.