சீதக்களபச் செந்தாமரைப்பூம்பாதம் என்று துவங்கும் விநாயகர் அகவலை அவ்வையார் இயற்றியுள்ளார். இதில் அற்புதம் நின்ற கற்பகக் களிறு என்றும், வித்தக விநாயக என்றம் வரிகள் வரும். இது விநாயகர் உயர்ந்த கல்விமான் என்பதைக் குறிக்கும். அவர் பல வித்தைகளிலும் அசகாய சூரர். ஆனாலும், இதற்காக கர்வம் கொள்ளாமல் குழந்தை உள்ளத்துடன் இருக்கிறார் என்பதை சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதம் என்னும் முதல்வரி விளக்குகிறது. களபம் என்றால் குட்டி யானை. பார்ப்பதற்கு குட்டி யானையாக இருக்கும் விநாயகர், தன்னை சரணடையும் பக்தர்களுக்கு பெரிய செயல்களையும் எளிதாக சாதிக்கும் வல்லமையை அளிப்பவராக இருக்கிறார். இதற்கு வேறொரு விளக்கமும் இருக்கிறது. களபம் என்றால் சந்தனக்கலவை என்றும் பொருள் உண்டு. குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் போன்ற வாசனை திரவியம் கலந்த சந்தன கலவையை சிவந்த தாமரை பாதங்களில் பூசியிருப்பவர் என்றும் பொருள் சொல்வர்.