ராமாயணப் போரில் ராவணன் மாண்டதும், இலங்கை மன்னனாக விபீஷணனை நியமித்தார் ராமர். அத்துடன் தான் பூஜித்தரங்க நாதரையும் பரிசாக அளித்தார். சிலையோடு புறப்பட்ட விபீஷணன் வழியில் ஒரு சிறுவனிடம் அந்தச் சிலையை பத்திரமாக வைத்திருக்கும்படி கூறிவிட்டு திரும்பி வந்தபோது, அந்தச் சிறுவனைக் காணவில்லை. அவன் தரையில் வைத்து விட்டுப்போன சிலையையும் விபீஷணனால் அசைக்க முடியவில்லை. அந்தச் சிறுவனை துரத்திச் சென்ற விபீஷணன், அவனைக் கண்டுபிடித்து அவன் தலையில் குட்டினான். சிறுவனாக வந்தவர் உச்சிப்பிள்ளையாரே, அவரை விபீஷணன் தலையில் குட்டிய பள்ளம் இரண்டரை அங்குல அளவில் உச்சிப்பிள்ளையாரின் தலையில் இன்றும் உள்ளது. விபீஷணன் கொண்டு வந்த சிலை ஸ்ரீரங்கத்தில் தங்கிவிட்டது. அவரே அரங்கநாதர். 273 அடி உயரத்தில் அமர்ந்துள்ள உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க 417 படிகளை கடக்க வேண்டும். இவரை வேண்டுவோர் வேண்டியதைப் பெறலாம்.