பதிவு செய்த நாள்
12
செப்
2016
12:09
வால்பாறை: வால்பாறை கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட, 101 விநாயகர் சிலைகள் நேற்று விசர்ஜனம் செய்யப்பட்டன. வால்பாறை இந்து முன்னணி சார்பில், 25ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில், 101 இடங்களில் கடந்த, 5ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த சிலைகள் நேற்று காலை வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. பின், மதியம், 2:00 மணிக்கு விசர்ஜன ஊர்வலத்தையொட்டி நடைபெற்ற கூட்டத்துக்கு, இந்து முன்னணி கவுரவத்தலைவர் தாமோதரன் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலாளர் சபரீஸ்வரன், பொருளாளர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் வரவேற்றார். கோவிலிருந்து புறப்பட்ட விசர்ஜன ஊர்வலத்தை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வள்ளிக்கண்ணு துவக்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று, மாலையில் நடுமலை ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. இதையொட்டி, மாவட்ட ரூரல் எஸ்.பி., ரம்யாபாரதி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வனத்துறை சார்பில் வேட்டை தடுப்புக்காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.