ஸ்ரீரங்கம், திருவானைக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2011 11:09
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் கோவில் திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் நவராத்திரி உற்சவ விழா தொடங்கியது. பக்தர்கள் ஏராளமானோர் திரண்டனர். ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடக்கும் நவராத்திரி உற்சவ விழா வெகுவிமரிசையுடன் தொடங்கியது. இதை முன்னிட்டு ஸ்ரீதாயார் தங்க மயமாக்கப்பட்ட கொலுமண்டபத்தில் எழுந்தருளினார். நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் மூன்றாம் தேதி ஏழாம் நாள் திருவிழா அன்றைய தினம் ஸ்ரீதாயார் திருவடி சேவை நடக்கிறது. கண்கொள்ளா காட்சியை கண்டுதரிசிக்கும் பக்தர்களுக்கு செல்வ வளம் பெருகும் குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும் என்பது ஐதீகம். அக்., ஆறாம் தேதி ஸ்ரீரெங்கநாதர் ஸ்ரீகாட்டழகிய சிங்கர் கோவில் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அன்று மாலை தங்கக்குதிரை வாகனத்தில் ஸ்ரீரெங்கநாதர் பக்தர்கள் புடைசூழ வீதி உலாவந்து வன்னி மரத்தடியில் அம்பு போடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், ஆயிரக்கணக்கான அரங்கனின் பக்தர்கள் கலந்துகொண்டு சேவிப்பார்கள். * திருவானைக்கோவில்: பஞ்சபூத திருத்தலங்களில் நீர்த்தலமாக போற்றி புகழப்படும் திருவானைக்கோவில் ஸ்ரீஜெம்புகேஸ்வரர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வர் கோவிலில் நவராத்திரி உற்சவவிழா நேற்று தொடங்கியது. ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி நாளை ராஜஅலங்காரத்திலும், மூன்றாம் தேதி சரஸ்வதி அலங்காரத்தில் ஐந்தாம் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நவராத்திரி விழாவை முன்னிட்டு தினமும் பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, ஆன்மிக விவாதம் பரதநாட்டியம் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நவராத்திரி விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன், திருவானைக்கோவில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவில் இணை ஆணையர் ஆனந்த், தக்கார் சிவ அம்பலவாணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.