பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
ராமநாதபுரம், மாவட்டத்தில் உள்ள 93 அம்மன் கோயில்களில் முளைப்பாரி விழா நடந்தது. மண்டபம் அம்பலகாரத் தெரு கூனி மாரியம்மன், மண்டபம் முகாம் உமையாள்புரம் உமயநாயகி அம்மன், பாம்பன் தெற்குவாடி இலங்கை முத்து மாரியம்மன், வாலாந்தரவை தேவர் நகர் ஆதிபராசக்தி அம்மன்கோயில்களில் முளைப்பாரி விழா செப்., 6ல் முத்து பரப்பி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு வாலிபர்களின் ஒயிலாட்டம், மகளிர் கும்மியாட்டம் நடந்தது. செப்., 13 மாலை அம்மன் கரகம் கடற்கரைகளில் இருந்து எடுத்து கோயிலை வந்தடைந்தது. நேற்று காலை அம்மன் கரகம் பக்தர்களின் தரிசனத்திற்கு வீதியுலா சென்றது. பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கிட்டும், பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியும் நேர்த்தி கடன் நிறைவேற்றினர். மாலையில் அம்மன் கரகம் முளைப்பாரி சுமந்த பெண்களுடன் ஊர்வலமாக சென்று கடற்கரையில் கரைக்கப்பட்டது. அம்பலகாரத் தெரு கூனி மாரியம்மன் கோயில் விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் செல்வராஜ், ரமேஷ், குமார், முருகானந்தம், கவுன்சிலர் முனியசாமி மற்றும் இளைஞர் மன்றத்தினர் செய்தனர். உமையாள்புரத்தில் விழா ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் கருப்பசாமி, தரைக்குடியான், பாண்டி, நாகராஜன் செய்தனர். மாவட்டத்தில் மேலும் 89 கோயில்களில் முளைப்பாரி விழா நடந்தது. இக்கோயில்களில் செப்., 20ல் குளுமை பொங்கல் விழா நடக்கிறது.