பதிவு செய்த நாள்
15
செப்
2016
12:09
தலைவாசல்: தலைவாசல் அருகே, செல்வவிநாயகர் மற்றும் மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேகங்கள், கோலாகலமாக நடந்தன. தலைவாசல், ஆறகளூரில் உள்ள, செல்வவிநாயகர் ஆலயத்திற்கு, விமானத்துடன் கூடிய கோபுரம், சமீபத்தில் கட்டப்பட்டது. அக்கோவில் கும்பாபிஷேகம், நேற்று முன்தினம் இரவு, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கி, ஹோம பூஜை நடந்தது. நேற்று அதிகாலை, கும்பாபிஷேகம் முன்னிட்டு, மூலவரான செல்வ விநாயகருக்கு, சிறப்பு அலங்காரத்துடன், விசேஷ பூஜை நடந்தது. தொடர்ந்து, கோபுர உச்சியில் இருந்த கலசத்திற்கு, மந்திர புஷ்பங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள், புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்தனர். மேலும், செல்வ ஆஞ்சநேயர் திருவுருவ சிலைக்கு பிரதிஷ்டை செய்து, பூஜை நடந்தது. இதேபோல், தலைவாசல், மும்முடி, மதுரை வீரன் சுவாமி ஆலயத்தில், நேற்று காலை, மகா மாரியம்மன், விநாயகர் மற்றும் கன்னிமார் சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜை செய்து, கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆத்தூர், சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.