வேப்பமரத்தில் பால் வடிந்ததால் பரபரப்பு: சிறுவலூரில் குவிந்த கிராம மக்கள்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01அக் 2011 11:10
கோபிசெட்டிபாளையம்: சிறுவலூர் அருகே வேப்பமரத்தில் பால் வடிந்த தகவல் பரவியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவலூர் அருகே பாண்டியம்பாளையம், குஞ்சரைமேட்டில் கருப்பராயன் கோவில் உள்ளது. கோவில் அருகே 30 ஆண்டுகள் பழமையான வேப்ப மரம் உள்ளது. நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து, இந்த வேப்ப மரத்தில் பால் வடியத் துவங்கியது. குஞ்சரைமேடு பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏற காத்திருந்த பொது மக்கள், இதை கவனித்தனர். வேப்ப மரத்தில் பால் வடியும் தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. ஏராளமான பொது மக்கள் அங்கு திரண்டனர். வேப்பமரத்தில் இருந்து வடியும் பாலை சிலர் குடித்து பார்த்தனர். பாலை குடித்த கருப்பாயாள், ராமாயாள் ஆகிய மூதாட்டிகளுக்கு சாமி வந்தது. சாமி ஆடிய மூதாட்டிகள், "இங்கு கருப்பராயன் கோவில் கட்ட வேண்டும் என, தெரிவித்தனர். இதற்கு பொது மக்கள் சம்மதம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வேப்ப மரத்துக்கு குங்குமம், மஞ்சள் வைத்து, மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டனர். வேப்பமரத்தில் இருந்து பால் வடிந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பரபரப்பாக காணப்பட்டது.