திருவனந்தபுரத்துக்கு இன்று நவராத்திரி பவனி: சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை பவனி புறப்பட்டது!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2016 12:09
நாகர்கோவில், வரும் இரண்டாம் தேதி தொடங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக நவராத்திரி பவனி இன்று காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று புறப்பட்டது.
பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் ராஜ்யத்தின் தலைநகராக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்மனாபபுரம் விளங்கியது. இங்குள்ள அரண்மனை வளாகத்தில் சரஸ்வதி கோயில் உள்ளது. இது கவியரசர் கம்பர் வழிபட்ட சரஸ்வதிதேவி சிலை என்று வரலாறு கூறுகிறது. மன்னர்கள் காலத்தில் இக்கோயிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. பின்னர் நிர்வாக வசதிக்காக 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மன்னர் காலத்தில் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னரும் நவராத்திரி விழா தடையின்றி நடப்பதற்காக மன்னர் உத்தரவு படி சரஸ்வதிதேவி சிலை யானை மீது பவனியாக திருவனந்தபுரம் எடுத்து செல்லப்பட்டது. கூடவே வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகங்களும் எடுத்து செல்லப்பட்டது. மன்னர் ஆட்சி மறைந்த பின்னரும், அந்த மரபு மறக்கப்படாமல், இரு மாநிலங்களுக்கிடையே பல பிரச்னைகள் இருந்தாலும் இந்த விழா இருமாநிலங்களை இணைக்கும் விழாவாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு நவராத்திரி பூஜை வரும் இரண்டாம் தேதி தொடங்க உள்ளதை ஒட்டி இன்று காலை7.30-க்கு பத்மனாபபுரத்தில் இருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை விக்ரகம் நேற்று காலை புறப்பட்டது. பூஜைகளுக்கு பின்னர் பல்லக்கில் ஏற்றப்பட்ட விக்ரகத்துக்கு தமிழகபோலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். பின்னர் மேளதாளம் முழங்க பவனி புறப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கேரள போலீஸ் ஆப்சென்ட்: வழக்கமாக நவராத்திரி பவனியை வரவேற்று அழைத்து செல்ல கேரள போலீசார் வருவது வழக்கம். அவர்கள் பேன்ட் வாத்யங்களுடன் வந்து, அணிவகுப்பு மரியாதை செலுத்துவர். ஆனால் நேற்று சுசீந்திரத்துக்கு கேரள போலீசார் வரவில்லை. தமிழக போலீசார் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாட்டுக்கு கேரள போலீஸ் செல்ல வேண்டாம் எனவும், மாநில எல்லையான களியக்காவிளையில் கேரள போலீசார் வரவேற்று அழைத்து செல்வார்கள் எனவும், கேரள -தமிழக டி.ஜி.பி. இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. இது பக்தர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள போலீஸ் வராத பட்சத்தில் இன்று பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனியை கேரளாவுக்கு அனுப்ப மாட்டோம் என்று இப்பகுதி பா.ஜ.,, இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் அறிவித்துள்ளது. இதற்கு முன்னரும் இடது முன்னணி ஆட்சி காலத்தில் கேரள போலீசை அனுப்ப மறுத்ததால் அரண்மனை வளாகத்தில் இப்பகுதி மக்கள் நவராத்திரி பவனியை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.