பதிவு செய்த நாள்
01
அக்
2011
04:10
மறுநாள் ஒரு மணிக்கு ஸ்ரீ பேக்கரின் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்றேன். அங்கே கன்னி ஹாரிஸ், கன்னி காப், ஸ்ரீ கோட்ஸ் முதலானவர்களுக்கு அவர் என்னை அறிமுகம் செய்து வைத்தார். பிரார்த்தனை செய்வதற்காக எல்லோரும் முழந்தாள் இட்டனர். நானும் அவ்வாறே செய்தேன். ஒவ்வொருவரின் விருப்பத்துக்கும் ஏற்றவாறு, பல காரியங்களை முடித்தருள வேண்டுமென்று கடவுளைத் துதிப்பதே பிரார்த்தனை. அன்றை தினம் அமைதியாகக் கழிய வேண்டும் என்பதும் உள்ளத்தின் கதவுகளை ஆண்டவன் திறக்க வேண்டும் என்பதும் சாதாரணமான பிரார்த்தனைகள என்னுடைய சூக்ஷமத்திற்கென்று பின்வருமாறு ஒரு பிரார்த்தனையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. ஆண்டவனே எங்கள் மத்தியில் வந்திருக்கும் புதிய சகோதரருக்கு வழிகாட்டி அருளும். ஆண்டவனே ! எங்களுக்கு நீர் அளித்திருக்கும் சாந்தியை அவருக்கும் அளியும். எங்களைக் காப்பாற்றியிருக்கும் ஏசுநாதர் அவரையும் காப்பாராக. ஏசுவின் பெயராலேயே இவ்வளவும் வேண்டுகிறோம். இந்தக் கூட்டங்களில் பிரார்த்தனைக் கீதங்கள் பாடுவதோ, வேறுவிதச் சங்கீதமோ இல்லை. ஒவ்வொரு நாளும் விசேஷமாக ஏதாவது ஒன்றைக் கோரிப் பிரார்த்திப்போம். பிறகு கலைந்துவிடுவோம். அது மத்தியானச் சாப்பாட்டு வேளையாகையால் அவரவர்கள் சாப்பிடப் போய்விடுவார்கள் பிரார்த்தனை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகாது.
ஹாரிஸ், காப் ஆகிய இருவரும் வயது முதிர்ந்த கன்னிப் பெண்கள். ஸ்ரீ கோட்ஸ், குவேக்கர் என்னும் கிறிஸ்தவ கோஷ்டியைச் சேர்ந்தவர். முதற்கூறிய இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் வசித்து வந்தனர். இவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4 மணிக்குத் தங்கள் வீட்டுக்குத் தேநீர் சாப்பிட வந்துவிடுவிமாறு எனக்கு நிரந்தர அழைப்பு விடுத்தனர். ஞாயிற்றுக்கிழமைகளில் நாங்கள் சந்திக்கும் போது, அந்த வாரத்தில், சமய ஆராய்ச்சி சம்பந்தமாக நான் தெரிந்து கொண்டவைகளை ஸ்ரீ கோட்ஸிடம் கூறுவேன். நான் படித்த புத்தகங்களையும், அதனால் எனக்கு ஏற்பட்ட கருத்துக்களையும் பற்றி அவருடன் விவாதிப்பேன். அந்தப் பெண்களோ, தங்களுக்கு ஏற்பட்ட இனிமையான அனுபவங்களைப் பற்றிக் கூறுவார்கள். தாங்கள் கண்ட சாந்தியைக் குறித்தும் பேசுவார்கள்.
ஸ்ரீ கோட்ஸ் கபடமற்ற, உறுதியுள்ள இளைஞர். நாங்கள் இருவரும் சேர்ந்து உலாவப் போவது உண்டு. மற்றக் கிறிஸ்தவ நண்பர்களிடம் அவர் என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிப் பழக ஆரம்பித்து விடவே, தமக்குப் பிடித்தமான புத்தகங்கள் எனக்குக் கிடைக்கும்படி அவர் செய்தார். இவ்விதம் என்னிடம் நிறையப் புத்தகங்கள் சேர்ந்து விட்டன. என் மீது புத்தகச் சுமையை ஏற்றினார். என்றே கூறவேண்டும். உண்மையாகவே அவற்றைப் படிப்பதாக நான் ஒப்புக் கொண்டேன். நான் படிக்கப் படிக்கப் படித்தவைகளைக் குறித்து விவாதித்தும் வந்தோம்.
அத்தகைய புத்தகங்கள் பலவற்றை நான் 1893 இல் படித்தேன். அவை எல்லாவற்றின் பெயர்களும் எனக்கு நினைவில்லை. நான் படித்தவைகளில் சில, ஸிட்டி டெம்பிளைச் சேர்ந்த டாக்டர் பார்க்கர் எழுதிய வியாக்கியானம், ஸ்ரீபியர்ஸன் எழுதிய நிச்சயமான பல ருசுக்கள், ஸ்ரீ பட்லர் எழுதிய உபமானங்கள் முதலியன, இவற்றில் சில பகுதிகள் எனக்கு விளங்கவே இல்லை, சில விஷயங்கள் எனக்குப் பிடித்திருந்தன, மற்றவை எனக்குப் பிடிக்கவில்லை. நிச்சயமான பல ருசுக்கள் என்ற புத்தகம், பைபிளின் மதத்திற்கு ஆதரவாக, அதன் ஆசிரியர் அறிந்து கொண்ட பலவகை ருசுக்களைக் கொண்டது. இப்புத்தகம் என் மனதைக் கவரவில்லை. பார்க்கரின் வியாக்கியானம், ஒழுக்கத்தைத் தூண்டுவதாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இருக்கும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந் நூல் எவ்வகையிலும் பயன்படாது. பட்லரின் உபமானங்கள் ஆழ்ந்த கருத்துக்கள நிறைந்த கஷ்டமான நூலாக எனக்குத் தோன்றிற்று. அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நான்கு ஐந்து முறை படிக்க வேண்டும். நாஸ்திகர்களை ஆஸ்திகர்;களாகத் திருப்பிவிடும் நோக்கத்துடன் அந்நூல் எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றியது. கடவுள் உண்டு என்பதை நிரூபிப்பதற்காக இப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள வாதங்கள் எனக்கு அவசியம் இல்லாதவை. ஏனெனில் சந்தேகிக்கும் அந்தக் கட்டத்தை நான் முன்பே கடந்து விட்டேன். ஆனால், கடவுளின் ஒரே அவதாரம் ஏசுவே, கடவுளிடம் மனிதரைச் சேர்ப்பிக்க வல்லவரும் அவர் ஒருவரே என்பதை நிரூபிப்பதற்காகக் கூறப்பட்டிருந்த வாதங்கள் என் மனத்தைக் கவர்ந்து விடவில்லை.
எனினும் ஸ்ரீ கோட்ஸ் அவ்வளவு சுலபத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டுவிடக் கூடியவர் அன்று. என் மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. வைஷ்ணவத்திற்கு அடையாளமான துளசி மணி மாலை, என் கழுத்தில் இருப்பதை அவர் பார்த்தார். அது மூட நம்பிக்கை என்று எண்ணி, அதற்காக மனம் வருந்தினார். இந்த மூடநம்பிக்கை உங்களுக்கு ஆகாது, வாருங்கள் அந்த மாலையை நான் அறுத்து எறிந்து விடுகிறேன் என்றார். இல்லை. நீங்கள் அப்படிச் செய்துவிடக் கூடாது. இம் மாலை, என் அன்னை எனக்கு அளித்த தெய்வீக வெகுமதி என்றேன். ஆனால், இதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா ! என்று கேட்டார்.
இம்மாலையிலிருக்கும் தெய்வீக ரகசியம் இன்னது என்பது எனக்குத் தெரியாது. இதை நான் அணியாவிட்டால் எனக்குத் தீமை உண்டாகிவிடும் என்று நான் நினைக்கவும் இல்லை. அன்பினாலும் இது என்னுடைய சுகத்திற்கு உதவியாக இருக்கும் என்ற திட நம்பிக்கையுடனும் என் தாயார் இதை என் கழுத்தில் அணிவித்தார். ஆகையால் தக்க காரணமின்றி இதை நான் எறிந்துவிட முடியாது. அறுத்துவிடுமானால் புதிதாக ஒன்றைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்காது. ஆனால், இந்த மாலையை அறுத்துவிட முடியாது என்றேன்.
என் மத விஷயத்தில் ஸ்ரீ கோட்ஸூக்கு மதிப்பு இல்லாதால் என் வாதத்தை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. அஞ்ஞானப் படுகுழியிலிருந்து என்னைக் கரையேற்றிவிட வேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். மற்ற மதங்களில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும் அதைப் பற்றிக் கவலையில்லை. கிறிஸ்தவத்தை நான் ஒப்புக் கொண்டாலன்றி எனக்கு விமோசனமே இல்லை என்பதை நான் உணர்ந்துவிடச் செய்ய அவர் விரும்பினார். எனக்காக ஏசுநாதர் ஆண்டவனிடம் பரிந்து பேசினாலன்றிப் பாவங்களிலிருந்து நான் மன்னிப்புப் பெற இயலாது என்றும், செய்யும் நற்காரியங்களெல்லாம் பயனற்றுப் போய்விடும் என்றும் நான் உணரச் செய்ய அவர் முயன்றார்.
பல புத்தகங்களை அவர் அறிமுகம் செய்து வைத்ததைப் போலவே, தீவிர மதப்பற்றுள்ள கிறிஸ்தவர்கள் என்று அவர் கருதிய நண்பர்கள் பலரையும் அவர் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவ்விதம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர்களில் பிளிமத் சகோதரர்களில் ஒருவர், என்னிடம் ஒரு வாதத்தை எடுத்துக் கூறத் தொடங்கினார். அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர் கூறியதாவது.
எங்கள் மதத்தின் மேன்மையை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் செய்துவிட்ட தவறுகளைக் குறித்தே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நினைத்து வருந்திக் கொண்டும், எப்பொழுதும் அவைகளைத் திருத்திக் கொண்டு அவற்றிற்காகப் பிராயச்சித்தம் செய்து கொண்டும். நீங்கள் இருப்பதாகச் சொல்வதில் இருந்தே அது தெரிகிறது. இந்த இடையறாத வினைச் சுழல் உங்களுக்கு எவ்விதம் விமோசனம் அளிக்க முடியும் ? உங்களுக்கு மனச்சாந்தியே இராது. நாம் எல்லோரும் பாவிகளே என்பதை ஒப்புக் கொள்ளுகிறீர்கள். எங்கள் நம்பிக்கை எவ்வளவு பரிபூரணமானது என்பதை இப்பொழுது பாருங்கள். சீர்திருந்துவதற்கும், பிராயச்சித்தம் பெறுவதற்கும் நாம் செய்யும் முயற்சிகளெல்லாம் வீணானவை என்றாலும் நமக்கு கதி மோட்சம் ஏற்பட வேண்டும் பாவத்தின் சுமையை நாம் எவ்விதம் தாங்க முடியும் ? அப் பளுவை நாம் ஏசுநாதர் மீது போட்டு விடத்தான் முடியும். அவர் ஒருவரே பாவமற்ற திருக்குமாரர், ஙஎன்னை நம்புகிறவர் யாரோ அவரே நித்தியமான வாழ்வை அடைவார்ங என்பது அவருடைய திருவாக்கு. கடவுளின் எல்லையற்ற கருணை இதில்தான் இருக்கிறது. நமது பாவங்களுக்கு ஏசுநாதர் பிராயச்சித்தத்தைத் தேடுகிறார் என்பதை நாம் நம்புவதால், நமது பாவங்கள் நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை நாம் பாவஞ் செய்யாதிருக்க முடியாது. பாவமே செய்யாமல் இவ்வுலகில் உயிர் வாழ்வது இயலாது. ஆகையால் நமது பாவங்களுக்காக ஏசுநாதர் துன்பங்களை அனுபவித்தார், மனித வர்க்கத்தின் எல்லாப் பாவங்களுக்கும் அவரே பிராயச்சித்தம் தேடினார். அவர் வழங்கும் இந்த மகத்தான் விமோசனத்தை ஒப்புக் கொள்கிறவர்கள் மாத்திரமே நிரந்தரமான மனச் சாந்தியைப் பெறமுடியும். உங்களுடைய வாழ்வு எவ்வளவு அமைதியற்றதாக இருக்கிறது. என்பதையும் எங்களுக்கு அமைதி எவ்வளவு நிச்சயமாக இருக்கிறது என்பதையும் சிந்த்தித்துப் பாருங்கள்.
இந்த வாதம் எனக்குக் கொஞ்சமும் திருப்தியளிப்பதாக இல்லை. எனவே பணிவுடன் பின்வருமாறு பதில் சொன்னேன். எல்லாக் கிறிஸ்தவர்களும் அங்கீகரிக்கும் கிறிஸ்தவம் இதுவேயாயின், இதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. என்னுடைய பாவங்களின் விளைவுகளிலிருந்து விமோசனம் பெற்றுவிட வேண்டும் என்று நான் நாடவில்லை. பாவத்திலிருந்தே, அதாவது பாவ எண்ணத்தில் இருந்தே விமோசனம் பெறுவதைத்தான் நான் நாடுகிறேன். அந்த லட்சியத்தை நான் அடையப்பெறும் வரையில் அமைதியின்றி இருப்பதில் திருப்தியடைவேன். நான் இவ்வாறு கூறியதற்குப் பிளிமத் சகோதரர், உங்கள் முயற்சி பயனற்றது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நான் கூறியதைக் குறித்து, நீங்கள் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள் என்றார். அந்தச் சகோதரர் சொன்னதற்கு ஏற்பவே அவருடைய செயலும் இருந்தது. அறிந்தே அவர் தவறுகளைச் செய்தார். அத்தவறுகளைப் பற்றி எண்ணம் தம்மைக் கவலைக்கு உள்ளாக்கி விடவில்லை என்பதையும் எனக்குக் காட்டி விட்டார்.
ஆனால், தவறுகளைப்பற்றிய இத்தகைய சித்தாந்தத்தை எல்லாக் கிறிஸ்தவர்களுமே நம்பிவிடவில்லை என்பதை இந்த நண்பர்களைச் சந்திப்பதற்கு முன்பே நான் அறிவேன். ஸ்ரீ கோட்ஸ், தம்மைப் பொறுத்தவரையில் கடவுளுக்குப் பயந்தே நடந்து வந்தார். அவருடைய உள்ளம் தூய்மையானது, நமக்கு நாமே தூய்மை அடைவது சாத்தியம் என்பதில் அவருக்கு நம்பிக்கை உண்டு. ஹாரிஸ், காப் என்ற அவ்விரு பெண்களுக்கும் இதே நம்பிக்கை இருந்தது. நான் படித்த புத்தகங்களில் சில பக்தி ரசம் மிகுந்தவை. ஆகவே எனக்கு ஏற்பட்ட கடைசி அனுபவத்தைக் கொண்டு ஸ்ரீ கோட்ஸ் அதிகக் கவலை அடைந்து விட்டார். என்றாலும், பிளிமத் சகோதரர் கொண்ட தவறான நம்பிக்கையினால் கிறிஸ்தவத்தைக் குறித்து எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிடாது என்று நான் ஸ்ரீ கோட்ஸூக்கு கூறியதோடு அவருக்கு உறுதியளிக்கவும் என்னால் முடிந்தது. எனக்குக் கஷ்டங்களெல்லாம் வேறு இடத்திலேயே ஏற்பட்டன. பைபிளையும், பொதுவாக அதற்கு, ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வியாக்கியானத்தையும் பற்றியவையே அவை.