மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் ஐப்பசி மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவில் ஐப்பசி மாத கிருத்திகை விழா சிறப்பாக நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு வழிபாடுகள் நடந்தது. தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது. 12:00 மணிக்கு மூலவர் தங்க கவசத்தில் காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். பக்தர்கள் அலகுகள் குத்திக் கொண்டு நேர்த்தி கடனை செலுத்தினர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் கிரிவலத்தில் ஏரளமானவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.