பதிவு செய்த நாள்
03
அக்
2011
03:10
என்னுடைய வக்கீல் தொழில் நன்றாகவே நடந்து வந்தது. ஆனால் அதைக் கொண்டு மாத்திரம் நான் திருப்தி அடைந்து விடவில்லை. மேற்கொண்டும் என்னுடைய வாழ்க்கையை எளிமை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதும் என்னுடைய சகோதர மக்களுக்கு உருப்படியான தொண்டு எதையாவது செய்ய வேண்டும் என்பதும் என் மனத்தில் இடையறாத ஆர்வமாக இருந்து வந்தன. அந்தச் சமயத்தில் ஒரு குஷ்டரோகி என் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். ஒரு வேளைச் சாப்பாட்டோடு அவரை அனுப்பிவிட எனக்கு மனம் இல்லை. எனவே, என் வீட்டிலேயே அவரை இருக்கச் சொல்லி அவருடைய புண்களுக்குக் கட்டுக் கட்டினேன். அவருக்கு வேண்டிய மற்ற சௌகரியங்களையும் கவனித்து வந்தேன். ஆனால் நான் நிரந்தரமாக இப்படிச் செய்துகொண்டு போக முடியாது. இது என்னால் ஆகாது. எப்பொழுதுமே அவரை என்னுடன் வைத்துக் கொள்ளுவதற்கான உறுதியும் என்னிடம் இல்லை. ஆகவே, ஒப்பந்தத் தொழிலாளருக்காக இருந்த அரசாங்க வைத்திய சாலைக்கு அவரை அனுப்பினேன்.
ஆனால், என் மனம் மாத்திரம் அமைதி இல்லாமலேயே இருந்தது. நிரந்தரமான ஜீவகாருண்யத் தொண்டு செய்ய வேண்டும் என்று என் மனம் அவாவுற்றது. செயின்ட் எயிடானின் மிஷனுக்கு டாக்டர் பூத் தலைவராக இருந்தார். அவர் அன்பு நிறைந்த உள்ளம் படைத்தவர். தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு இலவசமாக அவர் வைத்தியம் செய்து வந்தார். பார்ஸி ருஸ்தம்ஜீயின் தருமத்தைக் கொண்டு டாக்டர் பூத்தின் நிர்வாகத்தின் கீழ், ஒரு சிறு தரும வைத்திய சாலையை ஆரம்பிக்க முடிந்தது. அந்த வைத்திய சாலையில் நோயாளிகளுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்குப் பலமாக இருந்தது. மருந்து கலந்து கொடுக்கும் வேலை தினமும் இரண்டொரு மணி நேரத்திற்கு இருக்கும். அந்த அளவுக்கு என் காரியாலயத்தின் வேலையைக் குறைத்துக் கொண்டு, அங்கே கம்பவுண்டராக இருப்பது என்று தீர்மானித்தேன். என் வக்கீல் தொழில் சம்பந்தமான வேலை, பெரும்பாலும் என் ஆபீஸிலேயே கவனிக்க வேண்டிய வேலைதான்.
சாஸனப் பத்திரங்களை எழுதுவதும் மத்தியஸ்தம் செய்வதுமே இந்தத் தொழிலில் என் முக்கியமான அலுவல். மாஜீஸ்டிரேட் கோர்ட்டில் எனக்குச் சில வழக்குகள் இருக்கும். ஆனால் அவை பெரும்பாலும் அதிக விவாதத்திற்கு இடம் இல்லாதவைகளாக இருக்கும். என்னுடன் தென்னாப்பிரிக்காவுக்கு வந்து, அப்போது என்னோடேயே வசித்து வந்த ஸ்ரீ கான் நான் இல்லாத சமயத்தில் என் வழக்குகளைக் கவனித்துக் கொள்ளுவதாக கூறியிருந்தார். ஆகவே அச் சிறு வைத்திய சாலையில் சேவை செய்வது கொஞ்சம் சாந்தியை அளித்தது. வரும் நோயாளிகளின் நோயைக் குறித்து விசாரிப்பது. அந்த விவரங்களை டாக்டருக்குக் கூறுவது, மருந்துகளைக் கலந்து கொடுப்பது ஆகியவையே அந்த வேலை. அது துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்தியருடன், நான் நெருங்கிப் பழகும்படி செய்தது. அவர்களில் அநேகர் ஒப்பந்தத் தொழிலாளர்களான தமிழர், தெலுங்கர் அல்லது வட இந்தியர் ஆவர்.
போயர் யுத்தத்தின் போது நோயுற்றவர்களுக்கும் காயம் அடைந்தோருக்கும் பணிவிடை செய்வதற்கு, என் சேவையை அளிக்க நான் முன் வந்தபோது, இந்த அனுபவம் எனக்கு அதிக உதவியாக இருந்தது. குழந்தைகளை எவ்விதம் வளர்ப்பது என்ற பிரச்சினை எப்பொழுதும் என் முன்பு இருந்து வந்தது. தென்னாப்பிரிக்காவில் எனக்கு இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்களை வளர்ப்பது சம்பந்தமான பிரச்னையைத் தீர்க்க நான் வைத்தியசாலையில் செய்து வந்த தொண்டு பயனுள்ளதாயிற்று. என்னுடைய சுயேச்சை உணர்ச்சி, எனக்கு அடிக்கடி சோதனைகளைக் கொடுத்து வந்தது. என் மனைவியின் பிரசவ காலத்தில் சிறந்த வைத்திய உதவியை ஏற்பாடு செய்து கொள்ளுவது என்று நானும் என் மனைவியும் தீர்மானித்திருந்தோம். ஆனால் சமயத்தில் டாக்டரும் தாதியும் எங்களைக் கைவிட்டுவிட்டால் நாங்கள் என்ன செய்வது? அதோடு தாதி, இந்தியப் பெண்ணாகவும் இருக்க வேண்டும். பயிற்சி பெற்ற இந்தியத் தாதி கிடைப்பது இந்தியாவிலேயே கஷ்டம் என்றால் தென்னாப்பிரிக்காவில் எவ்வளவு கஷ்டம் என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.
எனவே, பிரசவ சிகிச்சை சம்பந்தமாகத் தெரிந்திருக்க வேண்டியவைகளையெல்லாம் நானே படித்துக் கொண்டேன். டாக்டர் திரிபுவனதாஸ் எழுதிய தாய்க்குப் புத்திமதி என்ற நூலைப் படித்தேன். மற்ற இடங்களில் அங்கும் இங்குமாக நான் பெற்ற அனுபவங்களையும் வைத்துக் கொண்டு, அந்த நூலில் கூறப்பட்டிருந்த முறைகளை அனுசரித்து என் இரு குழந்தைகளையும் வளர்த்தேன். ஒவ்வொரு பிரசவ சமயத்திலும் குழந்தையைக் கவனிக்க ஒரு தாதியை அமர்த்துவோம். ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் அந்தத் தாதியை வைத்துக் கொள்ளுவதில்லை. தாதியை அமர்த்துவதும் என் மனைவியைக் கவனித்துக் கொள்ளுவதற்கே அன்றி, குழந்தைகளைப் பராமரிப்பதற்கு அன்று. அந்த வேலையை நானே பார்த்துக் கொண்டேன்.
கடைசிக் குழந்தையின் பிரசவந்தான் என்னை மிகவும் கடுமையான வேதனைக்கு உள்ளாக்கி விட்டது. திடீரென்று பிரசவவேதனை ஏற்பட்டது. உடனே வைத்தியர் கிடைக்கவில்லை. மருத்துவச்சியை அழைத்து வரவும் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. அவள் வந்திருந்தாலும் பிரசவத்திற்கு அவள் உதவி செய்திருக்க முடியாது. சுகப்பிரசவம் ஆகும்படி நானே கவனித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. டாக்டர் திரிபுவன தாஸின் நூலை நான் நன்றாகப் படித்து வைத்திருந்தது எனக்கு அதிக உதவியாக இருந்தது. எனக்குக் கொஞ்சமேனும் பயமே ஏற்படவில்லை.
குழந்தைகளைச் சரியானபடி வளர்க்க வேண்டுமானால், சிசுக்களைப் பேணும் முறை, பெற்றோருக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். இது விஷயமாக நன்றாகப் படித்திருந்தது எவ்வளவு பயன் உள்ளதாக இருந்தது என்பதை ஒவ்வொரு கட்டத்திலும் நான் பார்த்திருக்கிறேன். இதைக் குறித்து நான் ஆராய்ந்து, அந்த அறிவைப் பயன்படுத்தியிராது போனால், என் குழந்தைகள் இன்று இருப்பதைப் போல் இவ்வளவு உடல் நலத்துடன் இருந்திருக்க மாட்டார்கள். குழந்தை அதன் ஐந்து வயது வரையில் கற்றுக்கொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்ற ஒரு மூடநம்பிக்கை நமக்கு இருந்து வருகிறது. இதற்கு மாறாக உண்மை என்னவென்றால், ஒரு குழந்தை அதன் முதல் ஐந்து வயதிற்குள் கற்றுக்கொள்ளாததைப் பின்னால் எந்தக் காலத்திலும் கற்றுக் கொள்ளுவதே இல்லை. கருவில் இருக்கும் போதே ஒரு குழந்தையின் படிப்பு ஆரம்பம் ஆகிவிடுகிறது. கருத்தரிக்கும் போது, பெற்றோருக்கு இருக்கும் உடல், மன நிலைகளே குழந்தைக்கும் ஏற்பட்டு விடுகின்றன. கர்ப்பத்தில் இருக்கும் போது தாயின் மனநிலைகள், ஆசாபாசங்கள், தன்மைகள் ஆகியவைகளால் குழந்தை பாதிக்கப்படுகிறது. பின்னர், குழந்தை பிறந்ததும், பெற்றோர்களைப் போலவே எதையும் செய்ய அது கற்றுக்கொள்கிறது. அப்புறம் அதிக காலம் வரையில் குழந்தையின் வளர்ச்சி, பெற்றோரைப் பொறுத்ததாகவே இருக்கிறது.
இந்த உண்மைகளையெல்லாம் அறிந்துகொள்ளும் தம்பதிகள், தங்களுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக உடற்கலப்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள். குழந்தைப் பேறு வேண்டும் என்று விரும்பும்போது மாத்திரமே கூடுவார்கள். உண்பதையும் உறங்குவதையும் போல் ஆண் - பெண் சேர்க்கையும் அவசியமான செயல்களில் ஒன்று என நம்புவது அறியாமையின் சிகரமே ஆகும் என்று நான் கருதுகிறேன். உலகம் நிலைத்திருப்பது, சந்ததி விருத்திச் செயலைப் பொறுத்திருக்கிறது. உலகமே ஆண்டவனின் திருவிளையாட்டு ஸ்தலம், அவனுடைய மகிமையின் பிரதிபிம்பம். எனவே, இந்த உலகத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு ஏற்ற வகையிலேயே சந்ததி விருத்திச் செயல் இருக்க வேண்டும். இதை உணருகிறவர்கள், எப்பாடுபட்டும் தங்கள் காம உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொள்ளுவார்கள், தங்கள் குழந்தைகளின் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் ஆன்ம நலனுக்கும் வேண்டிய அறிவைப் பெற்றுக் கொள்ளுவார்கள், பெற்றுக்கொண்ட அறிவின் பயனைச் சந்ததிகளுக்கு அளிப்பார்கள்.