பதிவு செய்த நாள்
03
அக்
2011
03:10
இன்னும் போலீஸ் ஸ்டேஷனை விட்டு, நான் வீட்டுக்குப் போகவில்லை. இரண்டுநாள் கழித்துப் போலீஸ் ஸ்டேஷனில் இருந்தபடியே என்னை ஸ்ரீ எஸ்கோம்பிடம் அழைத்துச் சென்றனர். எனக்குப் பாதுகாப்பு, முன் எச்சரிக்கை எதுவுமே தேவை இல்லாதிருந்தும் என் பாதுகாப்புக்காக இரு போலீஸாரை என்னுடன் அனுப்பினர்.
கப்பலிலிருந்து இறங்கிய அன்று, மஞ்சள் கொடி இறக்கப் பட்டதும் நேட்டால் அட்வர்டைஸர், பத்திரிகையின் பிரதிநிதி, என்னைப் பேட்டி காண்பதற்குக் கப்பலுக்கு வந்தார். அவர் என்னைப் பல கேள்விக் கேட்டார். அவற்றிற்குப் பதில் அளிக்கையில் என்மீது கூறப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டையும் நான் மறுக்க முடிந்தது. இந்தியாவில் நான் செய்த பிரசங்கங்கள் யாவும் எழுதிப் படித்தவை. இதற்காக ஸர் பிரோஸ்÷ஷா மேத்தாவுக்கு நான் நன்றி செலுத்த வேண்டும். அந்தப் பிரசங்கங்களின் பிரதிகளும் என்னிடம் இருந்தன. நான் மற்றபடி பத்திரிககைளுக்கு எழுதியவைகளுக்கும் நகல் வைத்திருந்தேன். என்னைப் பேட்டிகாண வந்த நிருபரிடம் அவைகளையெல்லாம் கொடுத்தேன். தென்னாப்பிரிக்காவில் அதிகக் கடுமையான பாஷையில் சொல்லாதது எதையும் நான் இந்தியாவில் சொல்லி விடவே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். கோர்லாண்டு, நாதேரி கப்பல்களில், பிரயாணிகள் தென்னாப்பிரிக்காவுக்கு வந்ததில், என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் அவருக்குக் காட்டினேன். அப்பிரயாணிகளில் அநேகர், முன்பே அங்கே வசிப்பவர்கள். மற்றும் பலர் டிரான்ஸ்வாலுக்குப் போகிறவர்களேயன்றி நேட்டாலில தங்க விரும்புகிறவர்கள் அல்ல. அந்தக் காலத்தில் செல்வம் தேட வருகிறவர்களுக்கு நேட்டாலை விட டிரான்ஸ்வால்தான் அதிகச் சௌகரியமானதாக இருந்தது ஆகையால் இந்தியரில் அநேகர் அங்கே போகவே விரும்பினார்கள்.
பத்திரிகை நிருபருக்கு அளித்த பேட்டியும், என்னைத் தாக்கியவர்கள் மீது வழக்குத் தொடர நான் மறுத்ததும், மிகச் சிறந்த வகையில் என் பேரில் நல்லெண்ணத்தை உண்டாக்கி விட்டன. தங்கள் நடத்தைக்காக டர்பன் ஐரோப்பியர்கள் வெட்கப்பட்டனர். நான் ஒரு பாவமும் அறியாதவன் என்று பத்திரிகைகள் கூறின, ஜனக்கூட்டத்தின் செயலைக் கண்டித்தன. இவ்விதம் என்னை ஆத்திரத்துடன் கொல்ல முயன்றது, எனக்கு அதாவது என் லட்சியத்திற்கு பெரும் நன்மையாகவே முடிந்தது. தென்னாப்பிரிக்காவில் இந்திய சமூகத்தின் கௌரவம் இதனால் உயர்ந்தது என் வேலையையும் இது எளிதாக்கியது.
மூன்று நான்கு நாட்களில் நான் என் வீட்டிற்குத் திரும்பினேன். சீக்கிரத்திலேயே வழக்கம்போல வாழ்க்கையை நடத்த ஆரம்பித்து விட்டேன். மேற்கண்ட சம்பவம் என் வக்கீல் தொழிலிலும் வருமானம் அதிகமாகும்படி செய்தது. சமூகத்தின் கௌரவத்தை அது அதிகமாக்கியதுடன் சமூகத்தின்மீது இருந்த துவேஷத்தையும் அது வளர்த்துவிட்டது. இந்தியன், ஆண்மையுடன் எதிர்த்தும் போராடுவான் என்பது நிரூபிக்கப்பட்ட உடனே அவன், தங்கள் நலத்துக்கு ஓர் ஆபத்து என்றும் வெள்ளைக்காரர்கள் கருதலானார்கள். நேட்டால் சட்டசபையில் இரு மசோதாக்களைக் கொண்டு வந்தார்க்ள். அதில் ஒன்று, இந்திய வர்த்தகர்களுக்குப் பாதகம் விளைவிக்கக்கூடியது, மற்றொன்று, இந்தியர் வந்து குடியேறுவதற்கு கடுமையான தடையை விதிப்பது. வாக்குரிமைக்காக நடத்திய போராட்டத்தினால் அதிர்ஷ்டவசமாக ஒரு பலன் ஏற்பட்டிருந்தது. அதாவது நிறம் அல்லது இனத்தைக் குறித்துச் சட்டம் பேதம் காட்டச் கூடாதாகையால், இந்தியர் என்ற வகையில் அவர்களுக்கு விரோதமாக எந்தச் சட்டமும் செய்யக்கூடாது என்று முடிவாகி இருந்தது. ஆகையால், மேற்கண்ட மசோதாக்களின் வாதம். எல்லோருக்கும் அச்சட்டம் அமுலாகும் என்ற முறையில் இருந்தது. ஆனால் அவர்களுடைய உண்மையான நோக்கம் நேட்டாலில் இருக்கும் இந்தியருக்கு மேற்கொண்டும் நிர்பந்தங்களை உண்டாக்குவதேயாகும்.
இம் மசோதாக்கள், எனக்கு இருந்த பொது வேலையை அதிக அளவுக்கு அதிகமாக்கிவிட்டன. சமூகம் எப்பொழுதையும்விட நன்றாகத் தன் கடமையை உணர்ந்திருக்கும்படியும் இவை செய்தன. அம் மசோதாக்களில் மறைந்திருந்த விஷம நோக்கத்தைச் சமூகத்தினர் அறியும்படி செய்வதற்காக அவைகளை இந்திய மொழிகளில் மொழிபெயர்த்து, முற்றும் விளக்கியும் வைத்தோம். குடியேற்ற நாட்டு மந்திரிக்கு விண்ணப்பித்துக் கொண்டோம். இதில் தலையிட அவர் மறுத்துவிட்டதால் மசோதாக்கள் சட்டம் ஆகிவிட்டன. நேரம் முழுவதையும் அநேகமாக நான் பொது வேலைக்கே செலவிட வேண்டியதாயிற்று. நான் முன்பு கூறியது போல் ஸ்ரீ மன்சுக்லால் நாஸர் டர்பனுக்கு முன்பே வந்து விட்டதால், அவர் என்னுடன் தங்கலானார். தம் நேரத்தை அவர் பொது வேலைகளில் செலவிட்டதால் ஓரளவுக்கு எனக்கு இருந்த வேலை குறைந்தது.
நான் இல்லாதிருந்த சமயத்தில் எனக்குப் பதிலாக காங்கிரஸ் காரியதரிசியாக இருந்த சேத் ஆதம்ஜி மியாகான், போற்றத்தக்க வகையில் தமது கடமையை நிறைவேற்றியிருந்தார். அங்கத்தினர்கள் தொகையை அதிகமாக்கியிருந்தார். அதோடு நேட்டால் இந்தியக் காங்கிரஸின் நிதியிலும் சுமார் ஆயிரம் பவுன் அதிகமாக்கியிருந்தார். இம் மசதோக்களினாலும் நாங்கள் கப்பலிலிருந்து இறங்கியபோது நடந்த ஆர்ப்பாட்டங்களினாலும் இந்தியரிடையே ஏற்பட்டிருந்த விழிப்பை நான் நல்ல வழியில் பயன்படுத்திக் கொண்டேன். அங்கத்தினர்கள் அதிகமாகச் சேருவதுடன் பணமும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். இப்பொழுது நிதி 5,000 பவுன் ஆயிற்று காங்கிரஸுக்கு நிரந்தரமான நிதியைத் திரட்டி அந்த நிதியைக்கொண்டு சொத்துக்களை வாங்கி, அச்சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வாடகையைக் கொண்டு ஸ்தாபனம் நடந்துவருமாறு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஒரு பொது ஸ்தாபனத்தை நிர்வகிப்பதில் எனக்கு இது முதல் அனுபவம். என் யோசனையை என் சக ஊழியர்களிடம் அறிவித்தேன். அவர்களும் இதை ஆதரித்தனர். வாங்கிய சொத்து, வாடகைக்கு விடப்பட்டது. கிடைத்த வட்டி, காங்கிரஸின் நடைமுறைச் செலவுக்குப் போதுமானதாக இருந்தது. சொத்தை நிர்வகிப்பதற்குச் செலவுக்குப் போதுமானதாக கொண்ட தர்மகர்த்தா சபையையும் அமைத்தோம். இன்றும் கூட அது இருந்து வருகிறது. ஆனால், அது இடைவிடாத சச்சரவுக்கு இடமாகி விட்டது. இதன் காரணமாக இப்பொழுது அச் சொத்தின் வாடகைப் பணமெல்லாம் கோர்ட்டில் சேர்ந்து கொண்டிருக்கிறது.
இந்தத் துக்ககரமான நிலைமை நான் தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த பிறகு உண்டாயிற்று. ஆனால் இந்தத் தகராறு ஏற்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்பே, பொது ஸ்தாபனங்களுக்கு நிரந்தரமான நிதி இருக்க வேண்டும் என்று எனக்கு இருந்த கருத்து மாறிவிட்டது. இப்பொழுதோ, பல பொது ஸ்தாபனங்களை நான் நிர்வகித்திருப்பதால் எனக்கு அதிக அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. நிரந்தரமான நிதியின் மூலம் பொது ஸ்தாபனங்களை நடத்துவது நல்லது அல்ல என்பதே இப்பொழுது என்னுடைய திடமான கருத்தாகி விட்டது. நிரந்தரமான நிதி ஒரு ஸ்தாபனத்திற்கு இருக்குமாயின் அந்த ஸ்தாபனத்தின் ஒழுக்கச் சிதைவுக்கான வித்தும் அந்நிதியுடன் ஊன்றப்பட்டு விடுகிறது. பொதுமக்களுடைய அங்கீகாரத்தின் பேரில், அவர்கள் அளிக்கும் நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடப்பதே பொது ஸ்தாபனம். அத்தகைய ஸ்தாபனத்திற்குப் பொதுஜன ஆதரவு இல்லையென்றால், பின்னும் நீடிப்பதற்கு அதற்கு எந்த உரிமையும் இல்லை. நிரந்தரமான நிதியைக் கொண்டு நடத்தப்படும் பொது ஸ்தாபனங்கள், பொதுஜன அபிப்ராயத்திற்கு மாறுபட்ட காரியங்களையும் அடிக்கடி செய்கின்றன.
நம்நாட்டில் இதை நாம் ஒவ்வொரு கட்டத்திலும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம். மத சம்பந்தமான தரும ஸ்தாபனங்கள் என்று கூறப்படும் சில ஸ்தாபனங்கள், கணக்குக் காட்டுவது என்பதையே விட்டுவிட்டன. தருமகர்த்தாக்களே, அச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்கள் ஆகிவிட்டார்க்ள. அவர்கள் யாருக்கும் பொறுப்பாளிகள் அல்ல. இயற்கையைப் போல அன்றைக்குத் தேவையானதைப்பெற்று வாழ்வதே பொது ஸ்தாபனங்களுக்கு உகந்தது என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை. பொதுஜன ஆதரவைப் பெற முடியாத ஸ்தாபனத்திற்கு பொதுஜன ஸ்தாபனமாக இருந்து வரும் உரிமையே இல்லை. வருடந்தோறும் ஒரு ஸ்தாபனத்திற்குக் கிடைக்கும் சந்தாத்தொகை, அதன் செல்வாக்கு, அதன் நிர்வாகம் எவ்வளவு யோக்கியமாக நடந்து வருகிறது என்பதற்கும் சரியான அளவுகோல் ஆகும். ஒவ்வொரு பொது ஸ்தாபனமும் இந்த அளவுகோலுக்கு உட்பட வேண்டும் என்பது என் கருத்து. ஆனால் யாரும் என்னைத் தவறாக எண்ணிக்கொண்டுவிட வேண்டாம். சில ஸ்தாபனங்களை அவைகளின் தன்மையை அனுசரித்து நிரந்தரமான கட்டடம் இல்லாமல் நடத்த முடியாது. நான் கூறியவை அத்தகைய ஸ்தாபனங்களுக்கு பொருந்தாது. பொது ஸ்தாபனங்களின் நடைமுறைச் செலவுகளை ஒவ்வொரு வருடமும் தானாகக் கிடைக்கும் சந்தாப் பணத்தை கொண்டு நிர்வகித்து வரவேண்டும் என்று சொல்லவே நான் விரும்புகிறேன்.
தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரக நாட்களில் இக் கருத்து ஊர்ஜிதமாயிற்று. அந்த மகத்தான பேராட்டம், ஆறு ஆண்டுகள் வரை நடந்தது. அதற்கு லட்சக்கணக்கான ரூபாய் தேவைப்படும். நிரந்தரமான நிதி எதுவும் இல்லாமலேயே அதை நடத்தினோம். சந்தா கிடைக்காவிட்டால் அடுத்த நாளைக்கு என்ன செய்வதென்று எனக்குத் தெரியாமல் இருந்த சமயங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன. ஆனால் வருங்காலத்தில் என்ன நேரும் என்பதை நான் இப்பொழுது சொல்லுவதற்கில்லை. இனிக் கூறப்போகும் வரலாற்றில், மேலே சொன்ன கருத்துக்கள் சரியானபடி நிரூபிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் காணலாம்.