பதிவு செய்த நாள்
03
அக்
2011
03:10
நான் கோகலேயுடன் தங்கியிருந்தபோது எப்பொழுதும் வீட்டிலேயே இருந்துவிடாமல் வெளியிலும் சுற்றிக் கொண்டிருந்தேன். இந்தியாவில் இந்தியக் கிறிஸ்தவர்களைச் சந்தித்து, அவர்களுடைய நிலைமையையும் தெரிந்து கொள்ளுவேன் என்று தென்னாப்பிரிக்கக் கிறிஸ்தவ நண்பர்களிடம் சொல்லி இருந்தேன். பாபு காளிசரண் பானர்ஜியைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். அவரிடம் எனக்குப் பெரு மதிப்பும் இருந்தது. காங்கிரஸின் நடவடிக்கைகளில் அவர் முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார். சாதாரணமாக இந்தியக் கிறிஸ்தவர்கள், காங்கிரஸில் சேராமல் ஒதுங்கி இருந்து விடுகிறார்கள், ஹிந்துக்கள் முஸ்லிம்களுடன் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து விடுகின்றனர் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் பாபு காளிசரன் பானர்ஜி விஷயத்தில் அத்தகைய சந்தேகம் எதுவும் எனக்கு இல்லை. அவரைச் சந்திக்க எண்ணியிருக்கிறேன் என்று கோகலேயிடம் சொன்னேன். நீங்கள் அவரைப் பார்ப்பதால் என்ன பயன்? அவர் மிகவும் நல்லவர். ஆனால் உங்களுக்குத் திருப்தி அளிக்கமாட்டார் என்றே அஞ்சுகிறேன். அவரை எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், நீங்கள் விரும்பினால் அவரைப் பார்த்துவிட்டு வாருங்கள் என்றார்.
அவரைப் பார்க்க விரும்புவதாக அனுமதி கோரி எழுதினேன். அவரும் உடனே பதில் அனுப்பினார். நான் அவரைப்பார்க்கச் சென்ற அன்று அவருடைய மனைவி மரணத் தறுவாயில் இருந்தார் என்பதை அறிந்தேன். காங்கிரஸில் அவரை நான் பார்த்தபோது கால்சட்டையுடம் கோட்டும் போட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்பொழுதோ ஒரு வங்காளி வேட்டி கட்டிக்கொண்டு சட்டை போட்டிருந்ததைக் கண்டு சந்தோஷம் அடைந்தேன். அச்சமயம் நான் கால்சட்டையும் பார்ஸிக்கோட்டும் அணிந்திருந்த போதிலும் அவருடைய எளிய உடை எனக்குப் பிடித்திருந்தது. அனாவசியப் பேச்சு எதுவும் வைத்துக் கொள்ளாமல் எனக்கு இருந்த சந்தேகங்களை நேரடியாக அவருக்குக் கூறினேன். மனிதன் ஆரம்பத்தில் பாவம் செய்தே கேடுற்றான் என்ற தத்துவத்தில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா? என்று அவர் என்னைக் கேட்டார். ஆம், நம்பிக்கை உண்டு என்றேன்.
அப்படியானால் சரி. ஹிந்து மதம் அதற்கு விமோசனம் அளிப்பதில்லை. கிறஸ்தவ மதம் அளிக்கிறது என்று அவர் சொல்லிவிட்டு, மேலும் கூறியதாவது, பாவத்தின் ஊதியம் மரணமேயாகும். ஏசுவினிடம் அடைக்கலம் புகுவது ஒன்றே அதனின்றும் விடுதலை பெறுவதற்குள்ள ஒரே மார்க்கம் என்று பைபிள் கூறுகிறது. பகவத் கீதை கூறும் பக்தி மார்க்கத்தைக் குறித்து நான் சொன்னேன். ஆனால் அது பயன்படவில்லை. அவர் என்னிடம் காட்டிய அன்பிற்கு நன்றி கூறிவிட்டு, விடை பெற்றுக்கொண்டேன். எனக்குத் திருப்தியளிக்க அவர் தவறி விட்டார். ஆனால், இச் சந்திப்பினால் நான் பயன் அடைந்தேன். இந்த நாட்களில் நான் கல்கத்தாத் தெருக்களில் இங்கும் அங்குமாகத் திரிந்து கொண்டிருந்தேன். அநேக இடங்களுக்கு நடந்தே போய்வருவேன். எனது தென்னாப்பிரிக்காவின் வேலை நீதிபதி மித்தர், ஸர் குரதாஸ் பானர்ஜி ஆகியவர்களின் உதவி எனக்கு வேண்டியிருந்தது. அவர்களைப் போய் பார்த்தேன். அதே சமயத்தில் ஸர் பியாரி மோகன் முக்கர்ஜியையும் சந்தித்தேன்.
காளி கோயிலைப்பற்றிக் காளி சரண் பானர்ஜி என்னிடம் கூறினார். முக்கியமாக, புத்தகங்களிலும் அதைக் குறித்து நான் படித்திருந்ததால் அதைப் பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆகவே, ஒரு நாள் அங்கே போனேன். அதே பகுதியில்தான் நீதிபதி மித்தரின் வீடும் இருந்தது. எனவே, நான் அவரைப் போயப் பார்த்த அன்றே காளி கோயிலுக்கும் போனேன். காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஆடுகள், மந்தை மந்தையாகப் போய்க்கொண்டிருந்ததை வழியில் பார்த்தேன். கோயிலுக்குப் போகும் சந்தின் இரு பக்கங்களிலும் வரிசையாகப் பிச்சைக்காரர்கள் இருந்தனர். அவர்களில் சில சாதுக்களும் இருந்தனர். உடல் வலுவுடன் இருக்கும் யாசகர்களுக்குப் பிச்சை போடுவதில்லை என்ற கொள்கையில் நான் அந்த நாளிலேயே உறுதியுடன் இருந்தேன். அவர்களில் ஒரு கூட்டம் என்னை விரட்டிக் கொண்டு வந்தது. சாதுக்களில் ஒருவர் ஒரு தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவர் என்னை நிறுத்தி, தம்பி, நீ எங்கே போகிறாய்? என்று கேட்டார். நான் கோயிலுக்குப் போகிறேன் என்றதும், என்னையும் என்னுடன் வந்தவரையும் உட்காரும்படி சொன்னார். அப்படியே உட்கார்ந்தோம்.
இந்த உயிர்ப்பலியை மதம் என்று நீங்கள் கருதுகிறீர்களா? என்று கேட்டேன்.
மிருகங்களைக் கொல்லுவதை மதம் என்று யாராவது கருதுவார்களா? என்றார், அவர்.
அப்படியானால் அதை எதிர்த்து நீங்கள் ஏன் பிரச்சாரம் செய்யக்கூடாது?
அது என் வேலை அல்ல. கடவுளை வழிபடுவதே நமது வேலை.
கடவுளை வழிபடுவதற்கு உங்களுக்கு வேறு இடம் கிடைக்க வில்லையா?
எங்களுக்கு எல்லா இடமும் நல்ல இடந்தான். மக்கள், ஆடுகளைப் போலத் தலைவர்கள் இட்டு செல்லும் இடங்களுக்குப் போய்க்கொண்டிருக்கின்றனர். சாதுக்களாகிய எங்கள் வேலை அதுவன்று. இந்த விவாதத்தை நாங்கள் வளர்த்துக்கொண்டிருக்கவில்லை. கோயிலுக்குப் போனோம். ரத்த ஆறுகள் எங்களை எதிர் கொண்டு அழைத்தன. அங்கே நிற்கவே என்னால் முடியவில்லை. நான் ஆத்திரமடைந்தேன் அமைதியையும் இழந்துவிட்டேன். அந்தக் காட்சியை என்றும் நான் மறக்கவே இல்லை. அன்று மாலையே சில வங்காளி நண்பர்கள் என்னை விருந்துக்கு அழைத்திருந்தார்கள். அங்கே ஒரு நண்பரிடம் இந்தக் கொடூரமான வழிபாட்டு முறையைக் குறித்துச் சொன்னேன். இதற்கு அவர் கூறியதாவது. ஆடுகளுக்குத் துன்பமே தெரியாது. பேரிகை முழக்கமும் மற்ற சப்தங்களும் அவைகளுக்கு துன்ப உணர்ச்சியே இல்லாதபடி செய்து விடுகின்றன. இதை ஒப்புக்கொண்டுவிட என்னால் முடியவில்லை. ஆடுகளுக்கு வாயிருந்தால் அவை வேறு கதையைச் சொல்லும் என்றேன். அக்கொடூரமான பழக்கம் நின்றாக வேண்டும் என்றும் எண்ணினேன். புத்தரின் கதையை நினைத்தேன். ஆனால், இவ்வேலை என் சக்திக்கு அப்பாற்பட்டது என்பதையும் கண்டேன்.
அன்று எனக்கு இருந்த அபிப்பிராயமே இன்றும் இருக்கிறது. மனிதனுடைய உயிரைவிட ஓர் ஆட்டு; குட்டியின் உயிர் எந்த வகையிலும் குறைவானதாக எனக்குத் தோன்றவில்லை. மனித உடலுக்கு ஓர் ஆட்டின் உயிரைப் போக்குவதற்கு நான் உடன்படக் கூடாது. ஒரு பிராணி எவ்வளக்கெவ்வளவு ஆதரவற்றதாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அது, மனிதனின் கொடுமையிலிருந்து காக்கப்படுவதற்கு உரிமைப் பெற்றிருக்கிறது என்று கருதுகிறேன். அத்தகைய சேவையைச் செய்வதற்குத் தன்னைத் தகுதியாக்கிக் கொள்ளாதவர், அதற்கு எவ்விதப் பாதுகாப்பையும் அளித்துவிட முடியாது. அக்கிரமமாக பலியிடப்படுவதிலிருந்து இந்த ஆடுகளைக் காப்பாற்றிவிடலாம் என்று நான் நம்புவதற்கு முன்னால் நான் அதிக சுயத் தூய்மையையும் தியாக உணர்ச்சியையும் அடைந்தாக வேண்டும். இந்தத் தூய்மையையும் தியாகத்தையும் அடையப் பாடுபடுவதில் நான் உயிர் துறக்க வேண்டும் என்று இன்று விடுவித்து கோயிலையும் புனிதப்படுத்துவதற்கு தெய்வீகக் கருணையுடன் கூடிய ஒரு பெரிய ஆத்மா, ஆணாகவோ பெண்ணாகவோ, இப்புவியில் பிறக்க வேண்டும் என்பதே என்னுடைய இடை விடாத பிரார்த்தனை. எவ்வளவோ அறிவும், தியாகமும், உணர்ச்சி வேகமும் கொண்ட வங்காளம், இப்படுகொலைகளை எப்படிச் சகித்துக் கொண்டிருக்கிறது?