பதிவு செய்த நாள்
31
அக்
2016
12:10
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், நேற்று துவங்கியது. 63வது தலம் மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ தலங்களில், 63வது தலமாக விளங்குகிறது. பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார், இங்கு அவதரித்த சிறப்பும் உண்டு. கோவில் அருகில் உள்ள, நந்தவன குருக்கத்தி மலரில், ஐப்பசி அவிட்ட நட்சத்திர நாளில், கதாயுதமாக, அவர் தோன்றினார். ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் வீற்றுள்ளார். இக்கோவிலில், அவரது அவதார உற்சவம், நேற்று துவங்கியது. அடுத்த மாதம், 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. துவக்க நாளான நேற்று மாலை, 3:00 மணிக்கு, அவருக்கு சிறப்பு திருமஞ்சனம்; அதைத்தொடர்ந்து, திருப்பாவை சாற்றுமறை என நடைபெற்று, மாலை, 5:30 மணிக்கு, வீதியுலா சென்றார். மீண்டும் கோவிலை அடைந்து, திருவாய்மொழி சேவை நடந்தது. இச்சேவைகள், அடுத்த மாதம், 8ம் தேதி வரை நடைபெறும்.
முக்கிய உற்சவங்கள்: நவ., 7ம் தேதி: பூதத்தாழ்வார் திருத்தேரில் வீதியுலா, காலை, 9:00 மணி; திருமஞ்சனம், மாலை, 4:30 மணி; சுவாமி வீதியுலா, இரவு, 8:00 மணி நவ., 8ம் தேதி: பூதத்தாழ்வார் மூலவர் திருமஞ்சனம், காலை, 6:30 மணி; ஆதிவராக பெருமாள் கோவிலில் மங்களாசாசனம், காலை, 9:00 மணி; மண்டப அலங்கார திருமஞ்சனம், மாலை, 4:30 மணி; ஸ்தலசயன பெருமாள், பூதத்தாழ்வார் ஆகியோர் வீதியுலா, இரவு, 8:00 மணி; திருவாய்மொழி சாற்றுமறை, இரவு, 9:00 மணி.