பதிவு செய்த நாள்
03
அக்
2011
05:10
இப்பொழுது ஆசியாக்காரர்கள் இலாகாவுக்குத் திரும்புவோம். ஆசியாக்காரர்கள் இலாகாவின் அதிகாரிகளுக்கு ஜோகன்னஸ்பர்கே கோட்டை இந்தியர், சீனர், மற்றவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இந்த அதிகாரிகள், அவர்களை நசுக்கிப் பிழிந்து கொண்டு வந்ததை நான் கவனித்துக் கொண்டு வந்தேன். ஒவ்வொரு நாளும் இதுபோன்ற புகார்கள் எனக்கு வந்து கொண்டிருந்தன. நியாயமாக வர வேண்டியவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், வருவதற்கு உரிமையே இல்லாதவர்கள் 100-பவுன் அவர்கள் திருட்டுத்தனமாக உள்ளே கொண்டுவரப்படுகிறார்கள். இந்த அக்கரமமான நிலைமைக்கு நீங்கள் பரிகாரம் தேடாவிட்டால் வேறு யார்தான் தேடப்போகிறார்கள் ? இதுவே புகார் எனக்கும் அதே உணர்ச்சி ஏற்பட்டது. இந்தத் தீமையை ஒழிப்பதில் நான் வெற்றிபெறாது போவேனாயின், டிரான்ஸ்வாலில் நான் வீணுக்கு வாழ்பவனே ஆவேன். ஆகவே, சாட்சியங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். ஓரளவுக்குச் சாட்சியங்களைச் சேகரித்து போலீஸ் கமிஷனரிடம் போனேன். அவர் நியாயமானவராகவே தோன்றினார். என்னை அலட்சியமாகப் புறக்கணித்துவிடாமல் நான் கூறியவைகளையெல்லாம் பொறுமையுடன் கேட்டுக் கொண்டார். என் வசமிருந்த சாட்சியங்களையெல்லாம் தனக்குக் காட்டும்படியும் கேட்டார். சாட்சியங்களைத் தாமே விசாரித்துத் திருப்தியும் அடைந்தார். ஆனால் தென்னாப்பிரிக்காவில் வெள்ளைக்கார ஜூரிகள், கறுப்பு மனிதருக்குச் சாதகமாக வெள்ளைக்காரக் குற்றவாளிக்குத் தண்டனை அளிப்பது கஷ்டமானது என்பதை நான் அறிந்திருந்தது போலவே அவரும் அறிந்திருந்தார், ஆனால் எப்படியும் முயன்று பார்ப்போம். ஜூரிகள் விடுதலை செய்துவிடுவார்களே என்று பயந்து கொண்டு குற்றவாளிகளைச் சும்மா விட்டு விடுவது என்பது சரியல்ல. அவர்களை நான் கைது செய்து விடுகிறேன். என்னாலான முயற்சி எதையும் நான் செய்யாது விடமாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன் என்றார், போலீஸ் கமிஷனர்.
வாக்குறுதி எனக்குத் தேவையில்லை. பல அதிகாரிகளின் மீது எனக்குச் சந்தேகம் இருந்தது. ஆனால், அவர்கள் மீதெல்லாம் ஆட்சேபிக்க முடியாத சாட்சியங்கள் என்னிடம் சரி வர இல்லை. ஆகையால், குற்றம் செய்தவர்கள் என்பதில் யார் மீது எனக்குச் சிறிதளவேனும் சந்தேகமே கிடையாதோ அப்படிபட்ட இருவரை மாத்திரம் கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. என்னுடைய நடமாட்டத்தை எப்பொழுதும் ரகசியமாக வைத்திருப்பதற்கில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் நான் போலீஸ் கமிஷனரிடம் போய்கொண்டிருக்கிறேன் என்பது அநேகருக்குத் தெரியும். எந்த இரு அதிகாரிகளைக் கைது செய்ய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டனவோ அந்த இரு அதிகாரிகளுக்கும் ஓரளவுக்குத் திறமை வாய்ந்த ஒற்றர்கள் இருந்தனர். அவர்கள் என் அலுவலகத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்து என்னுடைய நடமாட்டத்தைக் குறித்து அந்த அதிகாரிகளுக்கு அடிக்கடி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். இன்னமொன்றையும் நான் ஒப்புக் கொள்ள வேண்டும். அந்த இரு அதிகாரிகளுக்கு மிகவும் கெட்டவர்களாகையால், அவர்களுக்குப் பல ஒற்றர்கள் இருந்திருக்க முடியாது. இந்தியரும் சீனரும் எனக்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால் அவர்களைக் கைது செய்திருக்கவே முடியாது.
இவர்களில் ஒருவர் எங்கோ போய் மறைந்துவிட்டார். அவரை வெளிமாகாணத்திலும் கைது செய்து கொண்டு வருவதற்கான வாரண்டைப் போலீஸ் கமிஷனர் பெற்றார். அவரைக் கைது செய்து டிரான்ஸ்வாலுக்குக் கொண்டுவந்தார். அவர்கள் மீது விசாரணை நடந்தது. அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் பலமாக இருந்தும், எதிரிகளில் ஒருவர் ஓடி ஒளிந்திருந்தார் என்ற சாட்சியம் ஜூரிகளுக்குக் கிடைத்திருந்தும், இருவரும் குற்றவாளிகள் அல்ல என்று கூறி விடுதலை செய்து விட்டார்கள். நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். போலீஸ் கமிஷனரும் மிகவும் வருத்தப்பட்டார். வக்கீல் தொழிலிலேயே எனக்கு வெறுப்புத் தோன்றிவிட்டது. குற்றத்தை மறைத்து விடுவதற்கும் அறிவைப் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டேன். ஆகவே, அறிவின் பேரிலேயே எனக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது.
அவ்விரு அதிகாரிகளும் விடுதலையடைந்துவிட்டனரெனினும், அவர்கள் செய்த குற்றம் அதிக வெளிப்படையானதாக இருந்ததால், அரசாங்கம் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை. அவர்கள் இருவரும் உத்தியோகத்திலிருந்து நீக்கப் பட்டனர். ஆசியாக்காரர் இலாகாவும் ஓரளவுக்குத் தூய்மை பெற்றது, இந்திய சமூகத்திற்கும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. அந்த அதிகாரிகள் மிகவும் கெட்டவர்களாக இருந்த போதிலும், அவர்களிடம் தனிப்பட்ட முறையில் எனக்கு எந்தவித விரோதமும் இல்லை என்பதையும் நான் சொல்ல வேண்டும். இது அவர்களுக்கும் தெரியும். அவர்களுக்குக் கஷ்டம் நேர்ந்து என்னிடம் வந்த சமயங்களில் அவர்களுக்கு நான் உதவி செய்திருக்கிறேன். அவர்களுக்கு உத்தியோகம் கொடுக்கும் யோசனையை நான் எதிர்க்காமல் இருந்ததால் ஜோகன்னஸ்பர்க் முனிசிபாலிடியில் அவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருந்தது. அவர்களின் நண்பர் ஒருவர், இது சம்பந்தமாக வந்து என்னைப் பார்த்தார். அவர்களுக்கு இடையூறு செய்யாதிருக்கச் சம்மதித்தேன். அவர்களுக்கு உத்தியோகமும் கிடைத்தது.
நான் கொண்டிருந்த இவ்வித மனோபாவத்தின் காரணமாக, நான் தொடர்பு கொண்டிருந்த அதிகாரிகள் என்னோடு நன்றாகவே பழகி வந்தார்கள். அவர்களுடைய இலாகாவுடன் நான் அடிக்கடி போராட வேண்டியிருந்தபோதிலும், அதிகாரிகள் மாத்திரம் என்னுடன் நட்புடனேயே பழகிக் கொண்டிருந்தார்கள் அவ்விதம் நடந்து கொள்ளுவது என் சுபாவத்தில் சேர்ந்தது என்பதை அப்பொழுது நான் நன்றாக அறிந்து கொண்டிருக்கவில்லை. இது சத்தியாக்கிரகத்தின் அவசியமானதோர் பகுதி என்பதையும் அகிம்சையின் இயல்பே இதுதான் என்பதையும் நான் பின்னால் தெரிந்து கொண்டேன். மனிதனும் அவனுடைய செயல்களும் வெவ்வேறானவை. நுற்செயலைப் பாராட்ட வேண்டும், தீய செயலைக் கண்டிக்க வேண்டும். செயலைச் செய்யும் மனிதர், நல்லவராயிருப்பினும் தீயவராயிருந்தாலும் செயலின் தன்மைக்கு ஏற்றவாறு மரியாதைக்கும் பரிதாபத்திற்கும் உரியவராகிறார். பாவத்தை வெறுப்பாயாக. ஆனாலும், பாவம் செய்பவரை வெறுக்காதே என்பது உபதேசம் இது. புரிந்துகொள்ள எளிதானதாகவே இருந்தாலும், நடைமுறையில் இதை அனுசரிப்பதுதான் மிக அரிதாக இருக்கிறது. இதனாலேயே பகைமை என்ற நஞ்சு உலகத்தில் பரவுகிறது.
இந்த அகிம்சையே சத்தியத்தை நாடுவதற்கு அடிப்படை யானதாகும். இவ்விதம் நாடுவது அகிம்சையையே அடிப்படையாகக் கொண்டதாக இல்லாது போகுமாயின், அம் முயற்சியே வீண் என்பதை ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்து வருகிறேன். ஒரு முறையை எதிர்ப்பதும், அதைத் தாக்குவதும் முற்றும் சரியானதே. ஆனால், அம்முறையை உண்டாக்கிய கர்த்தாவையே எதிர்த்துக் தாக்குவது என்பது தன்னையே எதிர்த்துக் கொள்ளுவதற்கு ஒப்பாகும். ஏனெனில், நாம் எல்லோரும் ஒரே மண்ணைக் கொண்டு செய்த பண்டங்கள், ஒரே கடவுளின் புத்திரர்கள். ஆகவே நம்முள் இருக்கும் தெய்வீக சக்தியும் மகத்தானது. தனி ஒரு மனிதரை அலட்சியம் செய்வது அந்தத் தெய்விக சக்திகளை அலட்சியம் செய்வதாகும். அப்போது அம் மனிதருக்கு மட்டுமன்றி உலகம் முழுவதற்குமே தீங்கு செய்வதாக ஆகும்.