பதிவு செய்த நாள்
03
அக்
2011
05:10
டிரான்ஸ்வாலில் குடியேறிய இந்தியரின் உரிமைக்காகவும், ஆசியாக்காரர் இலாகாவின் சம்பந்தமாகவும் நடந்த போராட்டத்தைக் குறித்து நான் கூறும் முன்பு, என் வாழ்க்கையின் வேறு சில அம்சங்களைப்பற்றியும் நான் கூறவேண்டும். இதுவரையில் எனக்குக் கலப்பானதோர் ஆர்வம் இருந்து வந்தது. தன்னலத் தியாகம் செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியை, வருங்காலத்திற்கு ஏதாவது ஒரு பொருள் சேர்த்துவைக்க வேண்டும் என்ற ஆர்வம் மிதப்படுத்திக்கொண்டிருந்தது. பம்பாயில் நான் என் அலுவலகத்தை அமைத்த சமயம், ஓர் அமெரிக்க இன்ஷூயூரன்ஸ் ஏஜெண்டு அங்கே வந்தார். அவர் நல்ல முகவெட்டும் இனிக்கப் பேசும் திறமையும் உள்ளவர். நாங்கள் ஏதோ வெகு காலம் பழகிய நண்பரைப் போல அவர் என்னிடம் என் வருங்கால நலனைக் குறித்து விவாதித்தார். அமெரிக்காவில் உங்கள் அந்தஸ்தில் உள்ளவர்கள் எல்லோரும் தங்கள் ஆயுளை இன்ஷூர் செய்திருக்கிறார்கள். எதிர்காலத்தை முன்னிட்டு நீங்களும் இன்ஷூர் செய்து கொள்ள வேண்டாமா? வாழ்வு நிச்சயமில்லாதது. அமெரிக்காவிலுள்ள நாங்கள், இன்ஷூர் செய்து கொண்டு விட வேண்டியதை ஒரு மதக் கடமையாகவே கருதுகிறோம். நீங்களும் ஒரு சிறு தொகைக்கு இன்ஷூர் செய்து கொள்ளுமாறு நான் உங்களைத் தூண்டக்கூடாதா? என்றார், அவர்.
இந்தச் சமயம் வரையில், தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும், நான் சந்தித்த இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள் கூறியதற்கெல்லாம் செவிக்கொடுக்காமல் இருந்திருக்கிறேன். ஆயுள் இன்ஷூர் செய்வதென்பது பயத்தையும், கடவுளியிடம் நம்பிக்கை இன்மையையும் காட்டுவதாகும் என்று நான் எண்ணினேன். ஆனால், இப்பொழுதோ அமெரிக்க ஏஜெண்டு காட்டிய ஆசைக்கு பலியாகிவிட்டேன். அவர் தமது வாதத்தைச் சொல்லிக் கொண்டிருந்த போது என் மனக்கண்ணின் முன்பு என் மனைவியும் குழந்தைகளும் நின்றனர். உன் மனைவியின் நகைகள் எல்லாவற்றயுமே நீ விற்று விட்டாய் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். உனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் அவளையும் குழந்தைகளையும் பராமரிக்கும் பாரம், உன் ஏழைச் சகோதரர் தலைமீது விழும். அவரோ, உனக்குத் தந்தைபோல் இருந்து எவ்வளவோ பெருந்தன்மையுடன் நடந்து வந்திருக்கிறார். அப்படியிருக்க மேலும் அவர்மீது பாரத்தைச் சுமத்துவது உனக்குத் தகுமா? இதுவும் இதுபோன்ற வாதங்களும் என்னுள் எழுந்தன. இவை, ரூ. 10000 -க்கு இன்ஷூர் செய்யுமாறு என்னைத் தூண்டிவிட்டன.
ஆனால், தென்னாப்பிரிக்காவில் என் வாழ்க்கை முறை மாறியதோடு என் மனப்போக்கும் மாறுதலடைந்தது, சோதனையான இக்காலத்தில் நான் செய்த ஒவ்வொரு காரியத்தையும் கடவுளின் பெயரால் அவர் பணிக்கு என்றே செய்துவந்தேன். தென்னாப்பிரிக்காவில் நான் எவ்வளவு காலம் இருக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாது. இந்தியாவுக்குத் திரும்ப முடியாமலே போய்விடுமோ என்ற ஒரு பயமும் எனக்கு இருந்தது. ஆகவே, என் மனைவியையும் குழந்தைகளையும் என்னுடன் வைத்துக் கொண்டு அவர்களைப் பராமரிப்பதற்கு வேண்டியதைச் சம்பாதிப்பது என்று தீர்மானித்தேன். இத்திடம் நான் ஆயுள் இன்ஷூரன்ஸ் செய்திருந்ததற்காக வருந்தும் படி செய்தது. இன்ஷூரன்ஸ் ஏஜெண்டின் வலையில் விழுந்து விட்டதற்காக வெட்கப்பட்டேன். என் சகோதரர் உண்மையாகவே என் தந்தையின் நிலையில் இருப்பதாக இருந்தால் என் மனைவி விதவையாகி விடும் நிலைமையே ஏற்பட்டாலும், அவளைப் பாதுகாப்பதை அதிகப்படியான சுமை என்று அவர் கருதமாட்டார். மற்றவர்களைவிட நான் சீக்கிரத்தில் இறந்து போவேன் என்று நான் எண்ணிக்கொள்ளுவதற்குத்தான் என்ன காரணம் இருக்கிறது? பார்க்கப் போனால், உண்மையில் காப்பாற்றுகிறவர் எல்லாம் வல்ல கடவுளேயன்றி நானோ, என் சகோதரரோ அல்ல. நான் ஆயுள் இன்ஷூரன்ஸ் செய்ததனால், என் மனைவியும் குழந்தைகளும் சுயபலத்தில் நிற்க முடியாதவாறு செய்துவிட்டேன். அவர்கள் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளுவார்கள் என்று ஏன் எதிர்பார்க்கக்கூடாது? உலகத்தில் இருக்கும் எண்ணற்ற ஏழைக் குடும்பங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது? அவர்களில் நானும் ஒருவனே என்று நான் ஏன் கருதிக் கொள்ளக்கூடாது? இவ்வாறு எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
இவ்விதமான எண்ணற்ற எண்ணங்கள் என் மனத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. ஆனால் அவற்றின்படி நானே உடனேயே ஒன்றும் செய்துதவிடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்குத் திரும்பிய பிறகு இன்ஷூரன்ஸுக்கு ஒரு தவணையாவது பணம் கட்டியதாகவே எனக்கு ஞாபகம். இவ்விதமான எண்ணப்போக்குக்கு வெளிச் சந்தர்ப் பங்களும் உதவியாக இருந்தன. நான் முதல் தடவை தென்னாப்பிரிக்காவில் தங்கியபோது கிறிஸ்தவர்களின் தொடர்பே, சமய உணர்ச்சி என்னும் குன்றாமல் இருக்கும்படி செய்து வந்தது. இப்பொழுதோ பிரம்மஞான சங்கத்தினரின் தொடர்பு, அதற்கு அதிக பலத்தை அளித்தது. ஸ்ரீ ரிச் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்தவர். ஜோகன்ன ஸ்பர்க்கிலிருக்கும் அச்சங்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்படும்படி அவர் செய்தார். அதற்கும் எனக்கும் அபிப்பிராயபேதம் இருந்ததால், அச்சங்கத்தில் நான் அங்கத்தினன் ஆகவில்லை. ஆனால், அநேகமாக அச்சங்கத்தினர் ஒவ்வொருவருடனும் நான் நெருங்கிப் பழகினேன். ஒவ்வொரு நாளும் சமய சம்பந்தமாக அவர்களுடன் விவாதிப்பேன். பிரம்மஞான நூல்களிலிருந்து சில பகுதிகளை அங்கே படிப்போம். சில சமயங்களில் அவர்கள் கூட்டங்களில் பேசும் வாய்ப்பும் எனக்கு இருந்தது. பிரம்ம ஞான சங்கத்தின் முக்கியமான விஷயம், சகோதரத்துவ எண்ணத்தை வளர்த்துப் பரப்புவதாகும். இதைக் குறித்து எவ்வளவோ விவாதித்து இருக்கிறோம். அங்கத்தினர்களின் நடத்தை அவர்களுடைய கொள்கைக்குப் பொருத்தமானதாக இல்லாத சமயங்களில் அவர்களை நான் குறை கூறுவேன். இவ்விதம் குறை கூறிவந்ததால், என்னளவில் நன்மை ஏற்படாமல் போகவில்லை. என்னையே நான் சோதனை செய்து பார்த்துக் கொள்ளுமாறு அது செய்தது.