பதிவு செய்த நாள்
03
அக்
2011
05:10
தென்னாப்பிரிக்காவிடமிருந்து மூன்றரைக் கோடி பவுன் நன்கொடையைப் பெறுவதற்கும், அங்கிருக்கும் ஆங்கிலேயர், போயர்கள் இவர்களின் மனத்தைக் கவருவதற்குமே ஸ்ரீ சேம்பர் லேன் வந்திருந்தார். ஆகவே, இந்தியரின் தூது கோஷ்டிக்கு அவர் திருப்திகரமான பதில் கூறவில்லை. சுயாட்சி பெற்றுள்ள குடியேற்ற நாடுகளின் மீது பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அதிகாரம் எதுவும் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். உங்கள் குறைகள் நியாயமானவை என்றே தோன்றுகிறது. என்னால் முடிந்ததைச் செய்கிறேன். ஆனால் ஐரோப்பினரின் மத்தியிலிருந்து வாழ நீங்கள் விரும்பினால், அவர் உங்களிடம் பிரியங் கொள்ளும்படி செய்ய நீங்கள் முயலவேண்டும் என்று அவர் கூறினார்.
இந்தப் பதில் தூது சென்ற இந்தியரின் உற்சாகத்தைக் குலைத்துவிட்டது. நானும் ஏமாற்றமடைந்தேன். எங்கள் எல்லோருக்குமே இது கண்களைத் திறந்துவிடுவதாக இருந்தது. இனித் தீவிரமாக வேலையை ஆரம்பித்துவிட வேண்டியதே என்று கண்டேன். என் சகாக்களுக்கு நிலைமையை விளக்கிக் கூறினேன். உண்மையில் ஸ்ரீ சேம்பர்லேனின் பதிலில் தவறானது ஒன்றும் இல்லை. விஷயத்தைக் குழப்பாமல் உள்ளதை உள்ளபடியே அவர் சொன்னது நல்லதேயாகும். வல்லவன் வகுத்ததே வாய்க்கால் அல்லது வாளெடுத்தவன் வகுத்ததே சட்டம் என்பதை அவர் நியாயமான முறையில் எங்களுக்குத் தெரிவித்து விட்டார். ஆனால் எங்களிடமோ வாளே இல்லை வாளினால் வெட்டப்படுவதற்கு வேண்டிய துணிச்சலும் உடல் வலுவுங்கூட எங்களுக்கு இல்லை. இந்த உபகண்டத்தில் ஸ்ரீ சேம்பர்லென் கொஞ்ச காலமே இருப்பதாக முடிவு செய்திருந்தார். ஸ்ரீ நகருக்கும் கன்னியாகுமரிக்கும் 1,9000 மைல் தூரம் என்றால், டர்பனுக்கும் கேடப் டவுனுக்கும் 1,100 மைல் தூரத்திற்குக் குறைவில்லை. ஸ்ரீ சேம்பர்லேன் இந்த தொலை தூரத்தைச் சண்டமாருத வேகத்தில் சுற்றவேண்டியிருந்தது.
நேட்டாலிலிருந்து அவசரமாக டிரான்ஸ்வாலுக்குச் சென்றார். அங்கிருக்கும் இந்தியருக்காகவும் நான் ஒரு விண்ணப்பத்தைத் தயாரித்து அவரிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் நான் பிரிட்டோரியாவுக்குள் போய்ச் சேருவது எப்படி ? உரிய காலத்தில் என்னைத் தங்களிடம் தருவித்துக் கொள்ளுவதற்கு வேண்டிய சட்ட வசதிகளைப் பெறும் நிலையில் அங்கிருந்த நம் மக்கள் இல்லை. போயர் யுத்தம் டிரான்ஸ்வாலை வனாந்திரமாக்கி விட்டது. உணவுப் பொருள்களோ, துணிமணிகளோ அங்கே கிடைப்பதில்லை. கடைகளெல்லாம் காலியாகவோ, மூடப்பட்டோ கிடந்தன. அவை திறக்கப்பட்டு, சாமான்கள் விற்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதெனினும், அதற்கு நாளாகும் கடைகள் திறக்கப்பட்டு உணவுத் தானியங்கள் விற்கப்படும் வரையில், முன்னால் அங்கிருந்து ஓடிப் போய்விட்டவர்களைக் கூடத் திரும்பி வர அனுமதிக்க முடியாது. ஆகையால், டிரான்ஸ்வால் வாசி ஒவ்வொருவரும் உள்ளே நுழைய அனுமதிச் சீட்டுப் பெற வேண்டியிருந்தது. இது ஐரோப்பியருக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடும். ஆனால், இந்தியருக்கோ இது மிகக் கஷ்டமானதாயிற்று.
யுத்தத்தின்போது இந்தியாவிலிருந்தும் இலங்கையில் இருந்தும் அநேக அதிகாரிகளும் சிப்பாய்களும் தென்னாப்பிரிக்காவுக்கு வந்திருந்தனர். அவர்களில் அங்கேயே குடியேறிவிட விரும்புகிறவர்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டியது பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடமை என்று கருதப்பட்டது. எப்படியும் அவர்கள் புதிதாக அதிகாரிகளை நியமிக்க வேண்டியிருந்தது அனுபவம் வாய்ந்த அவர்கள் இருந்தது சௌகரியமாயிற்று. அவர்களில் சிலரின் சுறுசுறுப்பான புத்திக்கூர்மையினால் ஒரு புதிய இலாகாவையே சிருஷ்டித்து விட்டார்கள். இது அவர்களுடைய சாமார்த்தியத்தைக் காட்டியது. நீக்ரோக்களுக்கென்று ஒரு தனி இலாகா இருந்தது. அப்படியானால், ஆசியாக்காரர்களுக்கென்றும் ஒரு தனி இலாகா ஏன் இருக்கக்கூடாது. ? இந்த வாதம் நியாயமானதாகவே தோன்றியது. நான் டிரான்ஸ்வாலை அடைந்ததற்கு முன்னாலேயே இந்த இலாகா ஆரம்பமாகி தன்னுடைய அதிகாரத்தை நாலா பக்கங்களிலும் பரப்பி வந்தது. அனுமதிச் சீட்டுக்களைக் கொடுக்கும் அதிகாரிகள் வெளியேறியிருந்து இப்பொழுது திரும்புகிறவர்கள் எல்லோருக்குமே அனுமதிச் சீட்டுக்களைக் கொடுக்கலாம். ஆனால் திரும்பி வரும் ஆசியாக்காரர்களுக்குப் புதிய இலாகாவின் குறுக்கீடு இல்லாமல் அவர்கள் எப்படிக் கொடுத்துவிட முடியும் ? புதிய இலாகாவின் சிபாரிசின் பேரிலேயே அனுமதிச் சீட்டுக் கொடுப்பதென்றால் அனுமதிச் சீட்டுக் கொடுக்கும் அதிகாரிகளின் சில பொறுப்புக்களும் பாரமும் குறைந்து விடும். இவ்வாறே அவர்கள் வாதித்தார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், புதிய இலாகாவுக்கு ஏதாவது வேலை வேண்டும் என்பதுதான். அதோடு அந்த ஆட்களுக்குப் பணமும் வேண்டும். அவர்களுக்கு வேலை இல்லையென்றால் அந்த இலாகா அவசியம் இல்லை என்று ஆகிவிடும், அதை எடுத்தும் விடுவார்கள். ஆகையால், இந்த வேலையை அவர்களே தங்களுக்கு தேடிக் கொண்டார்கள்.
இந்தியர், அனுமதிச் சீட்டுக்கு இந்த இலாகாவிடம் மனுச் செய்து கொள்ளவேண்டும். பல நாட்கள் கழித்தே பதில் கிடைக்கும். டிரான்ஸ்வாலுக்குத் திரும்ப விரும்பியவர்களின் தொகை ஏராளமானதாக இருந்துவிடவே, இதற்குத் தரகர் கட்டணம் மிகவும் வளர்ந்துவிட்டது. அதிகாரிகளுடன் சேர்ந்து இத் தரகர்கள் ஏழை இந்தியர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் கொள்ளை யடித்தனர். சிபாரிசு இல்லாமல் அனுமதிச் சீட்டே கிடைக்காது என்பதை அறிந்தேன். சிபாரிசு வைத்தும் சிலர் விஷயத்தில் நூறு பவுன் வரையில் பணமும் கொடுக்க வேண்டியிருந்ததாம். இந்த நிலையில் நான் டிரான்ஸ்வாலுக்குப் போவதற்கு வழி இருப்பதாகவே தோன்றவில்லை. எனது பழைய நண்பரான டர்பன் போலீஸ் சூப்பரிண்டெண்டென்டிடம் போனேன். தயவு செய்து அனுமதிச் சீட்டுக் கிடைக்க உதவுங்கள். நான் டிரான்ஸ்வாலில் வசித்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று அவரிடம் கூறினேன். உடனே, அவர் தொப்பியை எடுத்து வைத்துக் கொண்டு புறப்பட்டு என்னுடன் வந்து எனக்கு அனுமதிச் சீட்டை வாங்கிக் கொடுத்தார். நான் புறப்பட வேண்டிய ரெயில் கிளம்புவதற்கு அரைமணி நேரமே இருந்தது. என் சாமான்களையெல்லாம் முன்பே தயாராக வைத்திருந்தேன். சூப்பரிண்டெண்டென்ட் அலெக்ஸாண்டருக்கு நன்றி தெரிவித்துவிட்டுப் பிரிட்டோரியாவுக்குப் புறப்பட்டேன்.
என் முன்னாலிருக்கும் கஷ்டங்கள் எவ்வளவு என்பதைக் குறித்து ஒருவாறு நான் இப்பொழுது தெரிந்துகொண்டேன். பிரிட்டோரியா போய்ச் சேர்ந்ததும் விண்ணப்பத்தைத் தயார் செய்தேன். சேம்பர்லேனைச் சந்திக்கப் போகும் பிரதிநிதிகளின் கேட்கப்பட்டதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால், இங்கோ புது இலாகா இருந்தது. அது முன்கூட்டி அறிவிக்க வேண்டும் என்று கேட்டது. என்னைப் பிரதிநிதிகளில் ஒருவனாக இருக்கவிடாமல் செய்ய அதிகாரிகள் விரும்பினார்கள் என்பதை பிரிட்டோரியா இந்தியர் அப்பொழுதே அறிந்திருந்தனர். வேடிக்கையானதேயென்றாலும் வேதனையான இச்சம்பவத்திற்கு மற்றோர் அத்தியாயமும் அவசியம்.