பதிவு செய்த நாள்
09
நவ
2016
11:11
தஞ்சாவூர்: தஞ்சாவூர் புகழ்பெற்ற பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் 1031 வது ஆண்டு சதய விழாவினை முன்னிட்டு,இரண்டாம் நாளான இன்று பேரபிஷேகம் மற்றும் ராஜராஜ உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின், 1031 வது சதய விழா, நேற்று துவங்கியது. உலகப் புகழ் பெற்று விளங்கும், தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய ராஜராஜ சோழன் பிறந்த நாளை, அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சதய விழா இரண்டாம் நாள் இன்று காலை 8.00 மணிக்கு திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமி தலைமையில், திருமுறை வீதிஉலா நடைபெற்றது. தொடர்ந்து, கலெக்டர் அண்ணாதுரை, பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, ஆகியோர்கள் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியதை செய்தனர். பிறகு, ராஜராஜன் உருவசிலைக்கு பல்வேறு அமைப்பினர்,பொதுமக்கள் என பலரும் மாலை அணிவித்தனர். அதன்பின், காலை 9.00 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு கிரை வகையில், தேன், தயிர்,மஞ்சள், பால், பழங்கள் ஆகிய 48 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அபிஷேகத்தை காண பல்வேறு பகுதியில், இருந்த வந்த சுற்றுலாபயணிகள், சிவயடியார்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மாலை திருமுறை பன்னிசை அரங்கம், இன்னிசை பாட்டுமன்றம் போன்றவை நடைபெறுகிறது. வெள்ளி விஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெறுகிறது. இரவு 9.30 மணியளவில் நாட்டிய நாடகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.