பதிவு செய்த நாள்
22
நவ
2016
12:11
பழநி: பழநி மலைக்கோயில் உண்டியலில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் கிடைத்துள்ளதால், 26 நாட்களில் ரூ. இரண்டு கோடியே 57 ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. தங்கம் 2130 கிராம், வெள்ளி 10,700 கிராம், வெளிநாட்டு கரன்சி-869ம், ரொக்கமாக ரூ.2 கோடியே 57 ஆயிரத்து 950 கிடைத்துள்ளது. இதில் தங்க நாணயங்கள், தாலி, மோதிரம் மற்றும் வெள்ளியிலான பாதம், வேல், தாலி, உருவம், சுவாமி சிலைகள் போன்றவற்றை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், திண்டுக்கல் உதவி ஆணையர் சிவலிங்கம், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
வசூல் அதிகரிப்பு: பழநிகோயில் உண்டியலில் வழக்கமாக 25 நாட்களில் ரூ.ஒன்று முதல் ஒன்றரை கோடி வரை வசூலாகும். தற்போது செல்லாதது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுகள் அதிகளவில் வந்ததால் வழக்கத்தை விட ரூ.50 லட்சம் கூடுதலாக கிடைத்துள்ளது. பணத்தட்டுப்பாட்டால் பக்தர்கள் வருகை குறைந்த போதும் தைப்பூச விழா போல 25 நாட்களில் ரூ.2 கோடிக்குமேல் வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.