பதிவு செய்த நாள்
22
நவ
2016
12:11
அதியமான்கோட்டை: கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, அதியமான் கோட்டையில் உள்ள தட்சண காசி கால பைரவர், நேற்று ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சண கால பைரவர் கோவிலில், காலபைரவர் ஜெயந்தி விழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, 6:00 மணி முதல், அஷ்ட பைரவர் யாகம், அஷ்ட லட்சுமி யாகம், தனகார்சன குபேர யாகம், அதிருந்ர யாகம் நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கால பைரவருக்கு, 64 வகையான அபிஷேகம், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள், நான்கு வேத பாராயணம் மற்றும் சிறப்பு பூஜைகளும், தொடர்ந்து ஆரத்தியும் நடந்தது. இரவு, 10:00 மணி முதல், 12:00 மணி வரை, குருதியாகம் நடந்தது. கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம், கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரளமான பக்தர்கள் நேற்று, அதியமான் கோட்டை கோவிலுக்கு வந்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வர் கோவிலில் உள்ள கால பைரவருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.