பதிவு செய்த நாள்
23
நவ
2016
01:11
சபரிமலை: சபரிமலையில், பாலிதீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது; குடிநீர் பாட்டில்களையும் வீசக் கூடாது; மீறும் பக்தர்களுக்கு, 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சபரிமலையில் குவியும் பாலிதீன் கழிவுகளால், வன வளம் பாதிக்கப்பட்டு, விலங்குகள் பலியாகின்றன. சில மாதங்களுக்கு முன், பாட்டில் குடிநீருக்கு, கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதன்படி, பக்தர்கள் குடிநீர் பாட்டில் எடுத்து செல்லக் கூடாது என, உத்தரவிடப்பட்டது. இதனால், குடிநீர் பாட்டில் பயன்பாடு குறைந்துள்ளது. நடை திறந்து ஆறு நாட்கள் கடந்த நிலையில், பாலிதீன் கழிவுகள் குறைவாகவே உள்ளன. இருமுடி கட்டில் உள்ள மஞ்சள், அவல், பொரி பாக்கெட்டுகளின் பாலிதீன் கழிவுகள், பன்னீர் எடுத்து வரும் பிளாஸ்டிக் குப்பிகள் அதிகளவில் குவிகின்றன. பக்தர்களிடம் சென்று பாலிதீன் கழிவுகளை கூடையில் பெற்றுக் கொள்ளும் போலீசார், 3,000 ரூபாய் அபராதம் விதிப்பதாக கூறுகின்றனர். பக்தர்களின் வேண்டுகோளுக்கு பின், இனி, பாலிதீன் பைகளில் பொருட்களை எடுத்து வரக்கூடாது என, எச்சரித்து அனுப்புகின்றனர். இதே போல, பம்பை ஆற்றில் ஆடைகள் வீசுவதையும், போலீசார் தடுத்து, அபராதம் விதிப்பதாக எச்சரிக்கின்றனர். சபரிமலையை, பாலிதீன், பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பது, பக்தர்களின் கடமை.