பதிவு செய்த நாள்
23
நவ
2016
01:11
வேலுார்: கார்த்திகை தீபத் திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்காக, இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, 10 கோடி ரூபாய் இழப்பீடு பெறும் வகையில், அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா, டிச., 3ல் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும். தீபத் திருவிழா நாட்களில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், பாதிக்கப்படுபவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவில் நிர்வாகம் காப்பீடு வசதி செய்துள்ளது. வரும், 30ல் துவங்கி அடுத்த மாதம், 16 வரை, அண்ணாமலையார் கோவில் பிரகாரங்கள், கோவிலைச் சார்ந்த இடங்கள் மற்றும் தீபம் ஏற்றப்படும் மலைப்பகுதி ஆகியவற்றில், பக்தர்களுக்கு விபத்து ஏற்பட்டால் இழப்பீடு பெற முடியும்.அதற்காக, நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு, 95 ஆயிரம் ரூபாயை, பிரிமியம் தொகையாக, அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் செலுத்தியிருக்கிறது. தனிநபருக்கு, 1 2 லட்சம், வீதம், 500 பேருக்கு, ஒட்டு மொத்தமாக, 10 கோடி ரூபாய் வரை இழப்பீடு பெற முடியும். டிச., 9ல் நடக்கும் தேரோட்டத்தின் போது, தேருக்கு கட்டைப்போடும் சேவைப் பணியாளர்கள், 50 பேருக்கு, கோவில் நிர்வாகம் காப்பீடு செய்திருக்கிறது.