பதிவு செய்த நாள்
24
நவ
2016
12:11
செல்லாத ரூபாய் நோட்டுகள் எதிரொலியாக, தமிழகத்தில், கோவில் உண்டியலை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறந்து, வசூலாகும் தொகையை, உடனடியாக வங்கியில் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ள ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள், மத்திய அரசு, வருமான வரித்துறை, ரிசர்வ் வங்கிகள் ஆகியவை அடிக்கடி விடும் அறிவிப்புகளால் குழப்பி போய் உள்ளனர். இதன் காரணமாக, இந்த நோட்டுகள் கோவில் உண்டியல்களில் காணிக்கையாக விழுவது அதிகரித்து வருகிறது. இதனால், கோவில் உண்டியல்களை, வழக்கத்திற்கு மாறாக, மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறந்து, வசூலான காணிக்கையை கணக்கிட்டு, அதை உடனடியாக வங்கியில் செலுத்த, கோவில் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி பிறப்பித்துள்ள உத்தரவு: முதுநிலை அந்தஸ்துள்ள, கோவில்களின் உண்டியலை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறக்க வேண்டும். உரிய அலுவலர் முன்னிலையில், வரவு இனங்களை கணக்கிட்டு, உடனடியாக, வங்கியில் முழுமையாக செலுத்த வேண்டும். தேவைப்பட்டால், கூடுதல் உண்டியல்களை நிறுவி, அதன் விபரங்களை உடனுக்குடன் தெரியப்படுத்தி, சம்பந்தப்பட்ட ஆவணத்தில் பதிய வேண்டும். இதில், தவறு, குறைபாடுகள் நடந்தால், கடும் குற்றங்களாக கருதப்படும். இணை ஆணையர்கள் அனைவரும், தங்களுடைய மண்டலத்தில் உள்ள கோவில்களின் உண்டியல் திறப்பு, வங்கியில் செலுத்திய தொகை விபரங்களை, மின்னஞ்சலில், தினமும் காலை, 10:30 மணிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. - நமது நிருபர் -