பதிவு செய்த நாள்
24
நவ
2016
12:11
சென்னை: கற்களால் கோவில் அமைக்கும் கலையை, பல்லவர்களே முதலில் துவக்கினர், என, மாமல்லபுரம் அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கல்லுாரியின், முன்னாள் விரிவுரையாளர், ந.பாலசுப்பிரமணியன் பேசினார். தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், எழும்பூர் தமிழ் வளர்ச்சித் துறை வளாகத்தில், பல்லவர் கால மரபுச் சின்னங்கள் என்ற தலைப்பில், மாதாந்திர திங்கள் சொற்பொழிவு நடந்தது. அதில், மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கல்லுாரியின் முன்னாள் விரிவுரையாளர், ந.பாலசுப்பிரமணியன் பேசியதாவது: சங்ககாலம் முதல், செங்கல், மண்ணால் கோவில் எழுப்பிய தமிழர்களிடம் இருந்து மாறுபட்டு, முதன் முதலில், மலைகளை உடைத்து, கற்கோவில்களை கட்டியவர்கள், பல்லவர்கள். அவர்கள், குடைவரை கோவில்கள், ஒற்றைக்கல் ரதங்கள், கட்டுமான கோவில்கள் என்ற, மூன்று வகைகளில் பாறை கற்களால் கோவில்களை வடிவமைத்தனர். மாமல்லபுரம் சிற்பங்களே, தமிழகத்தில் பல்லவர்களால் வடிவமைக்கப்பட்ட முதல் சிற்பங்கள். பொதுவாக, கோவில்களை கீழிருந்து மேல் நோக்கி எழுப்புவர். நிறைவாக, கும்பம் வைத்து, கும்பாபிஷேகம் செய்வர். ஆனால், மலையை செதுக்கி கோவில் கட்டியதால், கும்பம் வைக்காமல் கட்டினர். மாமல்லபுரம், அருமையான சிற்ப கலைக்கூடம். அது, அடுத்த தலைமுறை கலைஞர்களுக்கான பயிற்சி பட்டறையாகவும் அமைந்தது. அங்குள்ள புராணக்கதைகளை விளக்கும் ஒவ்வொரு படைப்புச் சிற்பமும், தத்ரூபமான உணர்ச்சிகளை வெளிக்காட்டுவனவாக உள்ளன. பல்லவர்களுக்கும், சாளுக்கியர்களுக்கும் அடிக்கடி போர் நடந்ததால், பல்லவ சிற்பிகள், போர் வீரர்களாகவும் இருந்தனர். அதனால், மாமல்லபுரத்தில் உள்ள, பல சிற்பங்கள் முற்று பெறாமல் நின்று விட்டன. இவ்வாறு அவர் பேசினார்.