பதிவு செய்த நாள்
29
நவ
2016
01:11
பழநி: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிப்பால், பழநி மலைக்கோயில் உண்டியலில் மூன்றே நாட்களில் ரூ.43 லட்சத்து 90 ஆயிரம் வசூலாகியுள்ளது. வங்கிகளின் சில்லரை தேவைக்காக தமிழக முதுநிலை கோயில்களில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ண அரசு உத்தரவிட்டுள்ளது. பழநி மலைக்கோயிலில் கடந்த நவ., 24ல் உண்டியல் எண்ணப்பட்டது. மூன்று நாட்களுக்குபின் நேற்று உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் தங்கம் 110 கிராம், வெள்ளி 1,600 கிராம், வெளிநாட்டு கரன்சி- 291ம், ரொக்கமாக ரூ. 43 லட்சத்து 90 ஆயிரத்து 925 கிடைத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், உருவம், உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, கோயில் பணியாளர்கள், வங்கிப் பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். வசூல் அதிகரிப்பு: 3 நாட்களில் நவ.,24 உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 23லட்சத்து 18 ஆயிரம் கிடைத்தது. தற்போது சனி, ஞாயிறு தினங்களில் ஐயப்பபக்தர்கள் வருகை அதிகரிப்பால், ரூ.43 லட்சத்து 90ஆயிரம் வசூல் ஆகியுள்ளது குறிப்பிடத் தக்கது.