பதிவு செய்த நாள்
29
நவ
2016
01:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா, டிச., 3ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. டிச., 12ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதை காண, 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். தீப திருவிழாவை காண வரும் பக்தர்கள், லாட்ஜ்களில் தங்குவர். விபரம் தெரிந்தோர், கடந்த மாதமே, லாட்ஜ்களில் புக்கிங் செய்து விட்டனர். வழக்கமாக வசூலிக்கும் தொகையை விட, மூன்று முதல், ஐந்து மடங்கு வரை, வாடகை கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், மஹா தீபம் ஏற்றப்படும், 12, அதற்கு முதல் நாள், மறு நாள் என, மூன்று நாட்களுக்கு சேர்த்து வாடகை கட்டணம் செலுத்தினால் மட்டுமே புக்கிங் என்று கூறி, வாடகை வசூலித்துள்ளனர். இப்படி, தினசரி, 2,000 முதல், 3,000 ரூபாய் வரை என, நிர்ணயித்து, மூன்று நாட்களுக்கு, 6,000 முதல், 9,000 வரை வசூல் செய்துள்ளனர்.
இதில் பவுர்ணமி மற்றும் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஒரே லாட்ஜில் தங்குபவர்களுக்கு, 10 சதவீத கட்டணம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. நட்சத்திர அந்தஸ்துடைய ஓட்டல்களில், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் என பலரும், முன்கூட்டியே புக்கிங் செய்து விட்டனர். அனைத்து லாட்ஜ்களிலும் புக்கிங் முடிந்து விட்டதால், சாதாரண பொதுமக்கள் காலி வீடுகள், திருமண மண்டபங்களில் தங்க அலைந்து வருகின்றனர். இதுகுறித்து, லாட்ஜ் உரிமையாளர்கள் கூறியதாவது: தீப திருவிழா, பவுர்ணமி நாட்களில், போலீசார், வருவாய்த்துறை, நகராட்சி, தீயணைப்பு துறை என, லாட்ஜ்கள் நடத்துவதற்கு தடையில்லா சான்று வழங்கும் துறையை சார்ந்தவர்களுக்கு, தலா, ஒரு அறை இலவசமாக வழங்க வேண்டும். இல்லையெனில் லாட்ஜ் நடத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் தான் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.