பதிவு செய்த நாள்
30
நவ
2016
12:11
சென்னை: சுவாமி சிலைகளை கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்று வந்த, மும்பை தொழில் அதிபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. அரியலுார் மாவட்டம், ஸ்ரீபுரந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பழங்கால சுவாமி சிலைகளை கடத்தி வந்த, சர்வதேச கடத்தல்காரன் சுபாஷ் சந்திரகபூர், 2008ல், தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டான். பின், அவனது கூட்டாளியான, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாள், 84, கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை போலீசார் மீட்டனர். அதற்கு முன், தீனதயாளனிடம் இருந்து, நடராஜர் உட்பட, நான்கு சிலைகளை, மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு இருந்தனர். இந்த சிலைகளை, அவன் அமெரிக்காவுக்கு கடத்தி, சுபாஷ் சந்திர கபூரிடம் விற்றுள்ளான்.
அதிரடி சோதனை : இந்த தகவலை, போலீசார் மறைத்து விட்டதாக கூறப்படுகிறது. அதை, தற்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார். அது தொடர்பாக, அவர் விசாரணை நடத்திய போது, 2005ல், நெல்லை மாவட்டம், பழவூர், நாறும்பு நாதர் கோவிலில், தீனதயாள் மற்றும் அவனது கூட்டாளிகள், 13 பஞ்சலோக சிலைகளை திருடியதும், அதில், ஆனந்த நடராஜர் உட்பட, ஆறு சிலைகளை, அவன் மும்பையில் பதுக்கி வைத்து இருப்பதாகவும், தகவல் கிடைத்தது.இதையடுத்து, சில தினங்களுக்கு முன், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையில், போலீசார் மும்பை சென்றனர். நேற்று முன்தினம், பீச் வியூ என்ற இடத்தில் உள்ள, இந்தோ - நேபாள் ஆர்ட் சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.அங்கு, ஆனந்த நடராஜர், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார் உள்ளிட்ட, ஐந்து ஆளுயுர சிலைகளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு, 200 கோடி ரூபாய். இதுதொடர்பாக, தொழில் அதிபர்கள், ஆதித்ய பிரகாஷ், 86, அவனது மகன் வல்லப பிரகாசம், 46, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இருவரையும், நேற்று சென்னை அழைத்து வந்த போலீசார், தென் மாவட்டங்களில் நடந்த சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும், ஸ்ரீவில்லிபுத்துார் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆதித்ய பிரகாஷ் மற்றும் வல்லப பிரகாசம் அளித்துள்ள வாக்குமூலம்:எங்கள் பூர்வீகம், நேபாளம். 1959ல் இருந்து, தமிழகம் உட்பட, நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிலைகளை கடத்தி, வெளிநாடுகளுக்கு விற்று வருகிறோம். தீனதயாள், தமிழக சிலைகளை திருடி வந்து கொடுப்பான்.
அமெரிக்காவுக்கு கடத்தல் : நாங்கள் மும்பை வழியாக, அமெரிக்காவுக்கு சிலைகளை கடத்தி சென்று, சுபாஷ் சந்திர கபூரிடம் ஒப்படைப்போம். தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், சுபாஷ் சந்திர கபூருக்கு சொந்தமாக, நட்சத்திர ஓட்டல் உள்ளது. அங்கு தான், சர்வதேச சிலை வியாபாரிகள் கூடுவர். சிலைகளை பார்வைக்கு வைத்து, நல்ல விலைக்கு விற்று விடுவோம். எங்களுக்கு தெரியாமல், சுபாஷ் சந்திர கபூருடன், சென்னை, மாமல்லபுரத்தைச் சேர்ந்த, நரசிம்மன் என்பவனும் சிலைகளை விற்று வந்தான். இவ்வாறு போலீசாரிடம் கூறி உள்ளனர்.