பதிவு செய்த நாள்
01
டிச
2016
12:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், ஏழு நாட்களில், 19.02 லட்சம் ரூபாய் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் மலைக் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை, ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களாக, மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர். அந்த வகையில், ஏழு நாட்களில், பக்தர்கள் செலுத்திய காணிக்கையை, நேற்று, கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி மற்றும் திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில், உண்டியல்களை திறந்து, கோவில் ஊழியர்கள் எண்ணினர். இதில், 19,02,278 ரூபாய் ரொக்கம், 142 கிராம் தங்கம், 892 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. ஒவ்வொரு மாதமும், குறைந்தபட்சம், 25 நாட்கள் முடிந்தால் தான் முருகன் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்படும். தற்போது, மத்திய அரசின், செல்லாத நோட்டுகள் அறிவிப்பால், வாரத்திற்கு ஒருமுறை உண்டியல் எண்ணப்படுகிறது என, கோவில் நிர்வாகம் தெரிவித்தது.